/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்நிலைகளில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்...வேலியே பயிரை மேய்வதா? மாசு ஏற்படுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
/
நீர்நிலைகளில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்...வேலியே பயிரை மேய்வதா? மாசு ஏற்படுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
நீர்நிலைகளில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்...வேலியே பயிரை மேய்வதா? மாசு ஏற்படுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
நீர்நிலைகளில் குப்பை கொட்டும் ஊராட்சி நிர்வாகம்...வேலியே பயிரை மேய்வதா? மாசு ஏற்படுவதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
ADDED : அக் 31, 2025 12:01 AM

திருவாலங்காடு:  திருவள்ளூர் மாவட்டத்தில், பருவமழை காரணமாக நீர்நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதை பயன்படுத்தி பெரும்பாலான ஊராட்சி நிர்வாகங்கள் நீண்ட நாட்களாக தேங்கியிருந்த குப்பையை நீர்நிலைகளில் கொட்டுகின்றன. நீர்நிலைகளை பராமரிக்க வேண்டிய நிர்வாகமே இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால் வேலியே பயிரை மேய்வதா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, பூண்டி உட்பட 14 ஒன்றியங்களில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகளும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 3,296 ஏரிகள், குளங்கள் என மொத்தம் 3,877 நீர்நிலைகள் உள்ளன. இவை  மட்டுமின்றி கொசஸ்தலை ஆரணி கூவம் உள்ளிட்ட ஆறுகள், 550 கி.மீ., நீளத்திற்கு மேல் ஒரு ஓடைக்கால்வாய் உள்ளது. சமீபகாலமாக நீர்நிலைகளில் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் திரு வாலங்காடு ஒன்றியம் குப்பம் கண்டிகை, கனகம்மாசத்திரம், முத்துக்கொண்டாபுரம் போன்ற ஊராட்சி நிர்வாகங்கள், தங்கள் பகுதியில் சேகரமான நீண்ட நாட்கள் தேங்கிய குப்பை கழிவுகளை கொசஸ்தலையாற்றில் வீசி சென்றுள்ளன.  அதேபோன்று சின்னம்மாபேட்டை, ராமாபுரம் பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஓடையிலும், ஒரத்துார், தொழுதாவூர் ஏரி நீர் கால்வாயிலும் குப்பை கழிவுகளை சமூக விரோதிகள் கொட்டி சென்றுள்ளனர்.
நீர்நிலைகளில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல், பூமி மாசடைவதாகவும், மக்கும் குப்பையுடன் சேர்த்து மக்கா பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதுடன் நீரின் தன்மையும் மாறுபாடும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஓடை ஏரிகளில் குப்பையுடன் நீர் கலந்து நாளடைவில் இவற்றில் இருந்து கொசுக்கள், பூச்சிகள் உற்பத்தி அதிகரித்து நீரை பருகும்  கால்நடைகள் மற்றும் விவசாய பாசன நிலங்கள் பாதிப்படையும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குப்பையை நீர்நிலைகளில் கொட்டுவதை தடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே நீர்நிலைகளில் குப்பையை கொட்டும் சம்பவம் திருவாலங்காடு ஒன்றியத்தில் அரங்கேறி உள்ளதால், வேலியே பயிரை மேய்வது போன்ற செயலாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபராதம் விதிக்க வேண்டும்
 சமூக விரோதிகள் நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே நீர்நிலைகளில் குப்பை கொட்டும் செயலில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை கொட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகாரளித்து வழக்கு பதிந்து அபராதம் விதிக்க வேண்டும். அப்போது தான் நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க முடியும்.
-ஆர்.நவீன்குமார், திருவாலங்காடு.

