/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு கலெக்டருக்கு எதிராக கைகோர்க்கும் கட்சிகள்
/
திருவள்ளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு கலெக்டருக்கு எதிராக கைகோர்க்கும் கட்சிகள்
திருவள்ளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு கலெக்டருக்கு எதிராக கைகோர்க்கும் கட்சிகள்
திருவள்ளூரில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு கலெக்டருக்கு எதிராக கைகோர்க்கும் கட்சிகள்
ADDED : ஜூலை 24, 2024 11:10 PM
திருவள்ளூர், :உயர் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றும் வகையில், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கையை எதிர்த்து கலெக்டருக்கு எதிராக, பல்வேறு கட்சியினர் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு, அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் பல வகையில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தின் 14 ஒன்றியங்களிலும் அரசு புறம்போக்கு, பொதுப்பணி துறை ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், இதர கட்டுமானங்கள் எழுந்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் உயர்நீதிமன்றம் உத்தரவின்படி, அப்போதைய கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், ஆக்கிரமிப்புகளை அகற்றி 2,450 ஏக்கர் அரசு நிலங்களை மீட்டார். அங்கு இரும்பு தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போதைய கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவுப்படி, காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் மழைக்காலத்தில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், நீர்நிலை ஆக்கிரமிப்பு, ஏரி, குளங்களின் நீர்வரத்து, வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
சில வாரங்களுக்கு முன், கும்மிடிப்பூண்டியில் பர்மா அகதிகள் முகாம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் போது, திடீரென தீக்குளித்த வாலிபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதைத் தொடர்ந்து மந்தமடைந்த ஆக்கிரமிப்பு மீட்பு பணி, சமீப நாட்களாக மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதற்கு எதிராக பல்வேறு கட்சிகள் திடீரென கைகோர்த்துள்ளன. திருவள்ளூர் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கையை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - ம.தி.மு.க., மற்றும் வி.சி., கட்சிகளின் சார்பில், நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதுகுறித்து ஓய்வு பெற்ற வருவாய் துறை உயரதிகாரி கூறியதாவது:
நீர்நிலை மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்பதில் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தெளிவான உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் நவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால், தமிழக அரசின் நடவடிக்கைக்கு, ஆளும் தி.மு.க.,வின் கூட்டணி கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இது நீதிமன்ற உத்தரவையே எதிர்க்கும் செயல். ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் என்பதற்காக போலீசார் மற்றும் அதிகாரிகளும் இப்பிரச்னையில் மவுனம் காத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.