/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மலேஷியா விமானத்தில் பயணிக்கு மூச்சு திணறல்
/
மலேஷியா விமானத்தில் பயணிக்கு மூச்சு திணறல்
ADDED : அக் 14, 2025 12:24 AM
சென்னை, மலேஷியா சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணிற்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து, மலேஷியா நாட்டு தலைநகர் கோலாலம்பூருக்கு, 290 பயணியருடன் மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. விமானம் நள்ளிரவு சென்னை வான்வெளியை கடந்து பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர், சுவாசிக்க முடியாமல் தவித்தார்.
இதையறிந்த விமான பணிப்பெண்கள், தலைமை விமானிக்கு தகவல் தந்தனர். அவர் உடனே, விமான நிலை வான் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
சென்னையில் தரையிறங்க அதிகாரிகள் அனுமதி அளித்தனர். விமானம் நேற்று அதிகாலை, 4:45 மணிக்கு அவசரமாக தரையிறங்கியது.
தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர், விமானத்தில் ஏறி பெண் பயணிக்கு, 'ஆக்சிஜன்' உதவி அளித்தனர். பின், பயணி வழக்கமான நிலைக்கு திரும்பினார். விமானம் காலை 5:40 மணிக்கு சென்னையில் இருந்து மீண்டும் கோலாலம்பூர் புறப்பட்டது.