/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைமேடைக்கு வெளியே நிற்கும் ரயில் பெட்டிகளால் பயணியர் அச்சம் மூன்று ஆண்டுகளாக தீர்வு காணாத அவலம்
/
நடைமேடைக்கு வெளியே நிற்கும் ரயில் பெட்டிகளால் பயணியர் அச்சம் மூன்று ஆண்டுகளாக தீர்வு காணாத அவலம்
நடைமேடைக்கு வெளியே நிற்கும் ரயில் பெட்டிகளால் பயணியர் அச்சம் மூன்று ஆண்டுகளாக தீர்வு காணாத அவலம்
நடைமேடைக்கு வெளியே நிற்கும் ரயில் பெட்டிகளால் பயணியர் அச்சம் மூன்று ஆண்டுகளாக தீர்வு காணாத அவலம்
ADDED : ஏப் 21, 2025 11:42 PM

திருவாலங்காடு,
சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது திருவாலங்காடு ரயில் நிலையம். இந்த மார்க்கத்தில், தினமும் 200க்கும் மேற்பட்ட புறநகர் ரயில்கள் சென்று வருகின்றன.
அனைத்து புறநகர் ரயில்களும் நின்று செல்லும் இந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் 50,000க்கும் மேற்பட்ட பயணியர் சென்னை, அரக்கோணம், காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக, இந்த மார்க்கத்தில் பயணியர் அதிகரிப்பு காரணமாக, ஒன்பது பெட்டி ரயில்களுக்கு பதிலாக, ரயில்வே நிர்வாகம் 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கி வருகிறது.
திருவாலங்காடு ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையில், 12 பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும் போது, கடைசி பெட்டியின் பெரும்பகுதி, நடைமேடைக்கு வெளியே நிற்கிறது.
இதனால், இந்த பெட்டியில் பயணிப்போர், முன்பக்கம் உள்ள ஒரு வழியை மட்டுமே ஏறவும், இறங்கவும் பயன்படுத்துகின்றனர். சிலர் நடைமேடை இல்லாததால் குதித்து இறங்கி செல்கின்றனர்.
மேலும், இரவு நேரத்தில் ரயில் நடைமேடையில் நிற்கிறதா, இல்லையா என்று தெரியாமல், பயணியர் குழப்பம் அடைகின்றனர். சிலர் அறியாமல் இறங்கும் போது காயமடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
கடந்த மூன்று ஆண்டுகளாக ரயில் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது. ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் கண்டுகொள்வதில்லை. மாறாக, கடந்த வாரம் முதியவர் ஒருவர் ரயில் பெட்டியில் இருந்து இறங்கிய போது தவறி விழுந்து காயமடைந்தார்.
ரயில்வே நிர்வாகம் பயணியர் உயிருடன் விளையாடி வருவது வருத்தமளிக்கிறது. தென்னக ரயில்வே மேலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அரக்கோணம் மார்க்கத்தில் நடைமேடை விரிவாக்கம் செய்யப்பட்டு, 12 பெட்டிகள் நிற்கும் அளவுக்கு இடம் உள்ளது. சிக்னல் போர்டு நடைமேடைக்கு உள்ளே இருப்பதால், ஒரு பெட்டி மட்டும் வெளியே நிற்கிறது. இதன் காரணமாக, விரைவில் சிக்னலை மாற்றி அமைக்க உள்ளோம்.
ரயில்வே துறை அதிகாரி,
திருவள்ளூர்.