/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் நிற்காத விரைவு ரயில் அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
/
திருவள்ளூரில் நிற்காத விரைவு ரயில் அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
திருவள்ளூரில் நிற்காத விரைவு ரயில் அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
திருவள்ளூரில் நிற்காத விரைவு ரயில் அபாய சங்கிலியை இழுத்த பயணியர்
ADDED : ஜூலை 20, 2025 12:55 AM

திருவள்ளூர்:சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயில், திருவள்ளூரில் நிற்காததால், ஆத்திரமடைந்த பயணியர் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி, ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கடற்கரையில் இருந்து, நேற்று முன்தினம் மாலை புறப்பட்ட மின்சார ரயில், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் அருகே வந்தபோது, மின்சாரத்தை வினியோகிக்கும் இணைப்பு கருவி பழுதால் நின்றது.
இதன் காரணமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் செல்ல வேண்டிய, அனைத்து புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
பழுது சரிசெய்யப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின், படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனால், சென்னை சென்ட்ரல், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், திருவள்ளூர் செல்லும் பயணியர் காத்திருந்தனர்.
அப்போது, 'சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாவட்டம் செல்லும் விரைவு ரயில்கள், இன்று ஒரு நாள் (நேற்று முன்தினம்) மட்டும் திருவள்ளூரில் நின்று செல்லும்' என, ரயில்வே துறையினர் அறிவித்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம், சென்னை - திருவனந்தபுரம் விரைவு ரயிலில், திருவள்ளூர் பயணியர் 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
ஆனால், திருவள்ளூரில் ரயில் நிற்காமல் சென்றதால், ஆத்திரமடைந்த பயணியர் அபாய சங்கிலியை இழுத்தனர். செஞ்சிபானம்பாக்கம் நிலையம் அருகே ரயில் நின்றதும், பயணியர் இறங்கிச் சென்று, ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஓட்டுநர், 'திருவனந்தபுரம் விரைவு ரயில், திருவள்ளூரில் நிற்காது. காட்பாடியில் தான் நிறுத்தம் உள்ளது' எனக் கூறினார். இதை ஏற்காத பயணியர், 'திருவள்ளூரில் இன்று ஒரு நாள் (நேற்று முன்தினம்) நின்று செல்லும் என, ரயில் நிலையத்தில் அறிவிக்கப்பட்டது' எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் அவர்களை சமாதானப்படுத்தியதை அடுத்து, அரை மணி நேரம் தாமதத்திற்கு பின், விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றது. அதன்பின் பயணியர், அரக்கோணத்தில் இருந்து வந்த மின்சார ரயிலில் திருவள்ளூருக்கு சென்றனர்.