/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ் இன்ஜினில் புகை அலறியடித்து ஓடிய பயணியர்
/
அரசு பஸ் இன்ஜினில் புகை அலறியடித்து ஓடிய பயணியர்
ADDED : அக் 21, 2024 02:22 AM

பொன்னேரி:பொன்னேரி பணிமனையில் இருந்து, அண்ணமாலைச்சேரி பகுதிக்கு தடம் எண்: 90சி என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று காலை 6:00 மணிக்கு அண்ணமாலைச்சேரியில் இருந்து பொன்னேரிக்கு, 35 பயணியருடன் பேருந்து சென்று கொண்டிருந்தது.
காலை 7:00 மணிக்கு பொன்னேரி அடுத்த சின்னகாவணம் அருகே, ஆரணி ஆற்று பாலத்தை கடக்கும்போது, திடீரென பேருந்து இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது.
இதை பார்த்த டிரைவர் உடனடியாக பேருந்தை நிறுத்தினார். தகவல் அறிந்த பயணியர் அச்சத்தில் அலறியடித்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். உடனடியாக, பொன்னேரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்குள் பொதுமக்கள் உதவியுடன், புகை வந்த இன்ஜின் பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டதால், சிறிது நேரத்தில் புகை வருவது முற்றிலும் நின்றது. அதை தொடர்ந்து, பேருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்ஜின் பகுதியில் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ள மின்சாதன பொருட்களில் மழைநீர் பட்டு, அதனால் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து புகை வந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

