/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிப்பறை இல்லாத ரயில் நிலையம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
/
கழிப்பறை இல்லாத ரயில் நிலையம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
கழிப்பறை இல்லாத ரயில் நிலையம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
கழிப்பறை இல்லாத ரயில் நிலையம் திருவள்ளூரில் பயணியர் கடும் அவதி
ADDED : நவ 12, 2025 10:12 PM
திருவள்ளூர்: தினமும் 1.50 லட்சம் பேர் பயன்படுத்தும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் கழிப்பறை வசதியில்லாததால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, தினமும் 160 புறநகர் மின்சார ரயில், 11 விரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. தினமும் சராசரியாக, 1.50 லட்சம் பயணியர், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கணினி முன்பதிவு மையம் மற்றும் புறநகர் மின்சார டிக்கெட் விற்பனை மையத்தில், மாதம் 2.5 கோடி ரூபாய் ரயில்வே நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கிறது.
இவ்வளவு வருவாய் கொண்ட ரயில் நிலையத்தில், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இங்குள்ள, இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடை நடுவே கட்டப்பட்ட கழிப்பறை, பயன்பாட்டிற்கு வராமல் மூடப்பட்டு உள்ளது.
இதனால், தினமும் அதிகாலை வரும் விரைவு ரயில்களில் இருந்து, சென்னை சென்ட்ரல் வழியில் உள்ள பகுதிகளுக்கு செல்வோர், கழிப்பறை வசதியின்றி தவித்து வருகின்றனர்.
மேலும், இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடையில் பயணியருக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, காட்சி பொருளாக இருக்கிறது. இதனால், கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது.
இங்குள்ள ஐந்து நடைமேடைகளில், விரைவு ரயில்களின் 24 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு இடவசதி உண்டு. ஆனால், 12 பெட்டி கொண்ட மின்சார ரயில் நிற்கும் அளவிற்கு தான், மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், விரைவு ரயில்களை பயன்படுத்துவோர் மழை மற்றும் வெயிலில் அவதிப்படும் நிலை உள்ளது. எனவே, திருவள்ளூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி, பயணியருக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் என, பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

