/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஐந்து அடுக்கு தலைமை மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் பயன்பாட்டிற்கு வராததால் நோயாளிகள் விரக்தி
/
ஐந்து அடுக்கு தலைமை மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் பயன்பாட்டிற்கு வராததால் நோயாளிகள் விரக்தி
ஐந்து அடுக்கு தலைமை மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் பயன்பாட்டிற்கு வராததால் நோயாளிகள் விரக்தி
ஐந்து அடுக்கு தலைமை மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்குவதில் அலட்சியம் பயன்பாட்டிற்கு வராததால் நோயாளிகள் விரக்தி
ADDED : மே 19, 2025 02:07 AM

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும், 120க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
நோயாளிகளுக்கு இடவசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர். திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள திருத்தணி, பொன்னேரி ஆகிய இரு மருத்துவமனைகளில், எந்த மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக உயர்த்துவது என போட்டியிருந்தது.
இதில், திருத்தணி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி, தமிழக முதல்வர், கடந்த 2021ம் ஆண்டில் அறிவித்தார்.
மேலும், கடந்த 2022ம் ஆண்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, புதிதாக மருத்துவமனை கட்டடம் கட்டுவதற்கு, 45 கோடி ரூபாய் சட்டசபையில் ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.
தொடர்ந்து, திருத்தணி பொதுப்பணித்துறையினர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு, தரைத்தளத்துடன் ஐந்து அடுக்கு கொண்ட மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி, 2022ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் கட்டடம் கட்டும் பணி நிறைவுபெற்றது.
கடந்த மாதம் 18ம் தேதி, தமிழக முதல்வர் ஸ்டாலின், பொன்னேரி பகுதியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், காணொலி காட்சி வாயிலாக, திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
ஆனால், இந்த மருத்துவமனைக்கு மின் இணைப்பு தற்போது வரை வழங்கப்படவில்லை. இதனால், முதல்வர் திறந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே உள்ளது.
இந்நிலையில், புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடமைக்காக ஒரு மருத்துவர் மட்டுமே இரண்டு மணி நேரம் உட்கார்ந்து, ஸ்கேன் எடுத்து வரும் நபர்களுக்கு விளக்கம் அளித்துவிட்டு சென்றுவிடுகிறார்.
தற்போதும் அனைத்து விதமான சிகிச்சைகளும், பழைய அரசு மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிறது. புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தற்போது வரை மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை.
இதனால், புதிய மருத்துவமனையில் அனைத்து பிரிவு அறைகள் பூட்டியே கிடக்கிறது. பழைய மருத்துவ மனையில் இடநெருக்கடியால் நோயாளிகள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, அரசு தலைமை மருத்துவமனைக்கு மின் இணைப்பு வழங்கி, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருத்தணி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.