/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தரம் உயர்த்தியும் போதிய டாக்டர்களை நியமிக்காததால்...திண்டாட்டம்!: திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
/
தரம் உயர்த்தியும் போதிய டாக்டர்களை நியமிக்காததால்...திண்டாட்டம்!: திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
தரம் உயர்த்தியும் போதிய டாக்டர்களை நியமிக்காததால்...திண்டாட்டம்!: திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
தரம் உயர்த்தியும் போதிய டாக்டர்களை நியமிக்காததால்...திண்டாட்டம்!: திருத்தணி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
ADDED : டிச 11, 2024 01:41 AM

திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டாலும், டாக்டர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை நீட்டித்து வருகிறது. இதனால், உரிய சிகிச்சை கிடைக்காமல், திருவள்ளூர் உள்ளிட்ட பிற பகுதி மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், வட்டார அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும், 120க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். இதுதவிர, கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் பார்க்கப்படுகிறது. இதற்காக, 50க்கும் மேற்பட்ட படுக்கறைகள் உள்ளன.
மேலும், அரசு மருத்துவமனையில் பல்வேறு அறுவை சிகிச்சைகளும் செய்யப்படுகின்றன. இந்நிலையில், விபத்துக்களில் சிக்கி பலத்த காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதிகள் திருத்தணி அரசு மருத்துவமனையில் இல்லாததால், நோயாளிகள் மேல்சிகிச்சை பெறுவதற்கு திருவள்ளூர் மற்றும் சென்னை அரசு பொது மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
உதாரணமாக ரத்த வங்கி, எம்.ஆர்.ஐ.,ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே போன்ற உயர்ரக கருவிகள் இல்லாததால் திருத்தணியில் சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இதையடுத்து, 2022ம் ஆண்டு சட்டசபையில் திருத்தணி அரசு மருத்துவமனையை, தரம் உயர்த்தி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக மாற்றம் செய்யப்படும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தும் அதற்கான அராசணை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து, மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரைத்தளத்துடன், 5 அடுக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தேசிய சுகாதார இயக்ககம் மூலம், 45 கோடி ரூபாய் நிதி ஓதுக்கீடு செய்து பணிகளில் துவங்கப்பட்டன.
திருத்தணி பொதுப்பணித் துறையினர் மொத்தம், 14,500 சதுரடியில் ஐந்து அடுக்கு கட்டடத்தில் மூன்று அறுவை சிகிச்சை அறைகள், சி.டி.., ஸ்கேன் அறை, எம்.ஆர்.ஐ.,ஸ்கேன் அறை, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி மையம், உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அறைகள் உட்பட பல்வேறு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதிய மருத்துவமனை கட்டடம் பணிகள், 95 சதவீதம் முடிந்து, இம்மாதத்திற்குள் புதிய மருத்துவமனை கட்டடம் சுகாதார துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும், வரும் ஜனவரி மாதத்தில் மாவட்ட அரசு மருத்துவமனை திறப்பு நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சில மாதங்களாக திருத்தணி அரசு மருத்துவமனையில், 17 மருத்துவர்களில் நான்கு பேர் மட்டுமே பணிபுரிவதால் நோயாளிகள் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
அதாவது, புறநோயாளிகள் பிரிவுகள் குறைந்தபட்சம், 6 மருத்துவர்கள் சிசிச்சை அளிக்க வேண்டிய இடத்தில் இரண்டே மருத்துவர்கள் பணியில் உள்ளதால் நோயாளிகள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளன.
அதே போல, ஆய்வகத்திலும் ஒரே ஒரு நிரந்திர பெண் ஊழியர் மட்டுமே பணிபுரிகிறார். செவிலியர்களும் பற்றாக்குறை உள்ளதால், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை, முதலுதவி அளித்து திருவள்ளூர், சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் அவலம் தொடர்ந்து வருகின்றன.
மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக அரசு அறிவித்தும், மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் பரிதவிக்கின்றனர்.
இது குறித்து திருத்தணி வட்டார மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மருத்துவமனையில், ஒரு பல் டாக்டர் உட்பட, 17 மருத்துவ பணியிடங்கள் உள்ளன. தற்போது இரண்டு மருத்துவர்கள் பல மாதங்களாக காலிப் பணியிடமாக உள்ளது. மீதமுள்ள மருத்துவர்களில், 3 பெண் மருத்துவர்கள் மகப்பேறு விடுப்பிலும், 3 மருத்துவர்கள் மருத்துவ விடுப்பிலும், ஒரு மருத்துவர் பயிற்சியிலும் உள்ளனர்.
இதுதவிர, இரண்டு மயக்க மருத்துவர்கள், இரண்டு மகப்பேறு மருத்துவர்கள், நான்கு பொதுப்பிரிவு மருத்துவர்கள் பணியில் உள்ளனர். தற்போது, நான்கு மருத்துவர்களே புறநோயாளிகளுக்கும், உள்நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை உள்ளது.
மருத்துவமனையில், 37 செவிலியர்களில், நான்கு செவிலியர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. விரைவில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை கட்டடம் திறக்க உள்ளதால், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.