/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சகதியாக மாறிய பட்டாபிராமபுரம் சாலை
/
சகதியாக மாறிய பட்டாபிராமபுரம் சாலை
ADDED : செப் 03, 2025 01:48 AM

திருத்தணி:மழைநீர் வடிகால்வாயில் தண்ணீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்கி சகதியாக மாறியுள்ளதால் பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.
திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தெருவில், 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
மேலும் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ரேஷன்கடை ஆகியவை உள்ளன.
இந்த தெருவில் தார்ச்சாலை அமைத்தபோது மழைநீர் கால்வாயும் ஒன்றிய நிர்வாகம் ஏற்படுத்தியது. முறையாக கால்வாய் அமைக்காததால் மழைநீர் வெளியேற முடியாமல் சாலையில் குளம்போல் தேங்குகிறது. தற்போது மழைபெய்துள்ளதால் சாலை சகதியாக மாறி உள்ளது.
இதனால் பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். கால்வாயில் மழை நீர் வெளியேற வசதி செய்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் பலமுறை ஒன்றிய அதிகாரிகள், கிராம சபையில் புகார் தெரிவித்தும் பலனில்லை.
எனவே மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பழுதடைந்த சாலையை சீரமைத்தும், கால்வாயில் மழைநீர் தேங்காமல் செல்வதற்கும் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.