/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரு பகுதியினர் இடையே பிரச்னை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
/
இரு பகுதியினர் இடையே பிரச்னை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
இரு பகுதியினர் இடையே பிரச்னை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
இரு பகுதியினர் இடையே பிரச்னை அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
ADDED : அக் 28, 2025 10:50 PM
மீஞ்சூர்: மழைநீர் வெளியேற்றுவதில் இரு பகுதியினர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய மற்றும் பேரூராட்சி அதிகாரிகளிடம், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கலைஞர் நகர் பகுதியில், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
இதை வெளியேற்றுவதற்காக, அங்குள்ள பொன்னேரி - திருவொற்றியூர் சாலையின் குறுக்கே கால்வாய் வெட்டி, கான்கிரீட் உருளைகள் பதிக்கப்பட்டன.
இந்த மழைநீர், மறுபகுதியில் உள்ள மீஞ்சூர் ஒன்றியம், நாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட பத்மாவதி நகரை சூழ்ந்தது.
அப்பகுதிவாசிகள், கடந்த 26ல் சாலை மறியலில் ஈடுபட்டதால், கால்வாய் மண் கொட்டி மூடப்பட்டது.
நேற்று கலைஞர் பகுதியைச் சேர்ந்தவர்கள், மூடப்பட்ட கால்வாயை திறக்க வேண்டும் எனக்கூறி, பொன்னேரி - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம், பத்மாவதி நகரை சேர்ந்தவர்களும் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு தரப்பினர் கால்வாயை திறக்க வேண்டும் எனவும், மற்றொரு தரப்பினர் திறக்கக்கூடாது எனவும் தெரிவித்தனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அங்கு வந்த மீஞ்சூர் பேரூராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில், பேரூராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஒருமித்த கருத்துடன் செயல்படாமல், இரு பகுதியினர் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
மழைநீர் செல்வதற்கான கால்வாய் வசதியிருப்பதால், அதற்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

