/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் மாடு சிக்கி சேவை பாதிப்பு மக்கள் ஆவேசம்
/
ரயிலில் மாடு சிக்கி சேவை பாதிப்பு மக்கள் ஆவேசம்
ADDED : செப் 13, 2025 09:31 PM
மீஞ்சூர்:கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து, சென்னை பெரம்பூர் வழியாக பீஹார் மாநிலம், தானாப்பூருக்கு செல்லும் சங்கமித்ரா விரைவு ரயில், நேற்று மாலை 4:00 மணிக்கு, கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் பயணித்தது.
இந்த மார்க்கத்தில் உள்ள நந்தியம்பாக்கம் - மீஞ்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற எருமை மாடு, விரைவு ரயிலில் சிக்கி உயிரிழந்தது.
மாட்டின் உடல் சிக்கியதால், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இயக்கப்பட்ட அனைத்து புறநகர் மின்சார ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள், ரயிலில் சிக்கிய மாட்டின் உடலை அப்புற படுத்தினர். அதன் பின், ஒரு மணி நேரம் தாமதமாக விரைவு ரயில் புறப்பட்டது. அதை தொடர்ந்து, மற்ற ரயில்களும் புறப்பட்டன.
இதன் காரணமாக, மீஞ்சூர் ரயில்வே கேட் ஒரு மணி நேரம் மூடியிருந்தால், பைக், கார் உள்ளிட்ட நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட நேரம் ரயில்வே கேட்டில் காத்திருந்தன. பின், ரயில்வே கேட் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி நோக்கி குறைந்த வேகத்தில் வந்த புறநகர் மின்சார ர யிலை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விரைவு ரயிலில் மாடு சிக்கியது குறித்து தெரிவிக்கப்பட்டதுடன், ரயில்வே கேட்டும் திறக்கப்பட்டதால், அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.