/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தாமரை ஏரியில் தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுநீர் கலப்பு அலட்சிய அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி
/
தாமரை ஏரியில் தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுநீர் கலப்பு அலட்சிய அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி
தாமரை ஏரியில் தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுநீர் கலப்பு அலட்சிய அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி
தாமரை ஏரியில் தொழிற்சாலை, குடியிருப்பு கழிவுநீர் கலப்பு அலட்சிய அதிகாரிகளால் மக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 21, 2025 11:57 PM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியில் தொழிற்சாலைகளின் கழிவுநீர், டேங்கர் லாரி கழிவுநீர், குடியிருப்பு பகுதிகளின் கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் மாசடைந்து வருகிறது. நான்கு ஆண்டுகளாக நீடிக்கும் இப்பிரச்னையை அரசு அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி நகரின் முக்கிய நீராதாரமான, 48 ஏக்கர் உடைய தாமரை ஏரி, நீர்வளத்துறையினர் பராமரிப்பில் உள்ளது. கும்மிடிப்பூண்டி நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை குறையாமல் பாதுகாக்கும் தாமரை ஏரி, தற்போது அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடந்த 2017ம் ஆண்டு, இளைஞர் அமைப்பு ஒன்று, கருவேல மரங்கள், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள், ஆகாய தாமரைகளை அகற்றினர். அப்போது, ஏரி புத்துயிர் பெற்றது. அதன்பின், கலெக்டர் உத்தரவின்படி, 2019 ஆகஸ்ட் மாத இறுதியில், ஏரிக்கரையோரம் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.
அப்போது, ஏரி கரையின் மீது மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில், நடைபாதை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின் ஏரியை கண்டுகொள்ளவில்லை.
கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், ஏரியை சுற்றியுள்ள திருவள்ளூர் நகர், அருண் நகர் குடியிருப்புகள், ஜி.என்.டி., சாலையோர உணவகங்கள், விடுதிகளின் கழிவுநீர் ஏரியில் திறந்து விடப்படுகிறது.
இந்த அத்துமீறல்கள், 30 சதவீதம் என்றால், மீதமுள்ள 70 சதவீத அத்துமீறல்கள், தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாய் வாயிலாக நடக்கின்றன. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாய், தாமரை ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மழைநீர் கால்வாயில், சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், டேங்கர் லாரிகளின் கழிவுநீர் திறந்து விடப்படுகிறது. இது, தாமரை ஏரியை இணைக்கும் கால்வாய்களில் கலக்கிறது.
தாமரை ஏரியில் கழிவுகளும், கழிவுநீரும் சூழ்ந்ததால், ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளன. ஏரி மாசடைந்ததை உறுதி செய்யும் விதமாக, 2023 மே மாத துவக்கத்தில் மீன்கள் செத்து மிதந்தன.
கடந்த 2023ல் பெய்த கனமழையின் போது, ஏரியில் தேங்கியிருந்த கழிவுநீர் நிரம்பி வழிந்து, கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலை மற்றும் ரெட்டம்பேடு சாலையை சூழ்ந்தது. நான்கு நாட்களாக சாலைகளில் ஓடிய கழிவுநீரால், பகுதிவாசிகள் வீட்டிற்குள் முடங்கினர்.
ஏரியில் கலக்கும் கழிவுநீர், அடுத்தடுத்துள்ள ஏரிகளை சென்றடைவதால், அந்த ஏரிகளும் மாசடைந்து வருகின்றன. நான்கு ஆண்டுகளாக அரங்கேறி வரும் நிலையில், தற்போது வரை தீர்வு காணப்படவில்லை என, இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இதை பாதுகாக்க வேண்டிய நீர்வளத் துறையினரும், தொழிற்சாலை கழிவுநீர் கலப்பை தடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தாமரை ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்காதது துரதிஷ்டவசமானது.
எனவே, இனியும் தாமதிக்காமல், பருவமழைக்கு முன் தாமரை ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கழிவுநீர் கலக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தாமரை ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். - சுற்றுச்சூழல் ஆர்வலர், கும்மிடிப்பூண்டி.