/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி தண்ணீர்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
/
சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி தண்ணீர்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி தண்ணீர்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி தண்ணீர்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 08, 2025 02:24 AM

செவ்வாப்பேட்டை:செவ்வாப்பேட்டை அருகே தண்ணீர்குளத்தில், நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கக்கோரி, அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை அருகே தண்ணீர் குளம் பகுதியில், திருநின்றவூர் முதல் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வரை, ஆறு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன.
இதில், திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் இருந்து தண்ணீர்குளம் வழியாக கிளாம்பாக்கம், தொட்டிகலை, ஆயலுார் உட்பட, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயிகள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதியில் தற்போதுள்ள வழியை அடைத்து, மேம்பாலத்தின் கீழ் பகுதியில், ௫௦௦ மீட்டருக்கு மாற்று பாதை அமைத்து தருவதாக, நெடுஞ்சாலைத் துறையினர் கூறியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தண்ணீர்குளம் பகுதி மக்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, தங்கள் பகுதியில், தற்போது பயன்படுத்தும் வழியிலேயே சுரங்கப் பாதை அமைத்து தரக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், பூந்தமல்லி உதவி கமிஷனர் ரவிக்குமார் மற்றும் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் மற்றும் போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின், நேற்று மதியம் 12:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்டோர் திரண்டு, சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி, மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், பொறுப்பு தாசில்தார் பரமசிவன் ஆகியோருடன் வந்த அதிகாரிகள், தண்ணீர்குளம் பகுதி மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர்.
அதில், சுரங்கப்பாதை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.