/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பையால் சுகாதாரம் கேள்விக்குறி திருவேங்கிடபுரம் மக்கள் அதிருப்தி
/
குப்பையால் சுகாதாரம் கேள்விக்குறி திருவேங்கிடபுரம் மக்கள் அதிருப்தி
குப்பையால் சுகாதாரம் கேள்விக்குறி திருவேங்கிடபுரம் மக்கள் அதிருப்தி
குப்பையால் சுகாதாரம் கேள்விக்குறி திருவேங்கிடபுரம் மக்கள் அதிருப்தி
ADDED : ஆக 18, 2025 01:14 AM
பொன்னேரி:திருவேங்கிடபுரத்தில் குப்பை கழிவுகளால் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதுடன், மின்விளக்கு, குடிநீர் வசதிகளை மேம்படுத்துவதில் நிர்வாகம் சுணக்கம் காட்டுவது சமூக ஆர்வலர்கள், குடியிருப்பு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் ஒன்றியம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, ஊராட்சி நிர்வாகத்தால் சேகரிக்கப்படுகிறது.
ஒரு வாரமாக திருவேங்கிடபுரம், உப்பரபாளையம் பகுதிகளில் குப்பை அகற்றப்படாமல், சாலையோரம் குவிந்து கிடக்கிறது. இதனால், குடியிருப்பு மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. இது, குடியிருப்பு மக்களிடையே அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஊராட்சியில் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. தினமும், 6,000 - 8,000 கிலோ வரை குப்பை குவிகிறது. அதற்கேற்ப போதிய துாய்மை பணியாளர்கள் இல்லை. இருப்பவர்களுக்கும் குறித்த நேரத்தில் ஊதியம் வழங்குவதில்லை.
இதுதொடர்பாக,கடந்த 12ம் தேதி அவர்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சு நடத்தினர். ஆனாலும், இதுவரை அவர்களுக்கும், பம்ப் ஆப்ரேட்டர்களுக்கும் சம்பளம் வழங்கவில்லை.
ஊராட்சிக்கு உட்பட்ட தெருக்களில், 300க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் பழுதாகி உள்ளன. அவை மாற்றப்படவில்லை. குடிநீர் மோட்டார்கள் செயலிழந்து கிடக்கின்றன. அவையும் சரிசெய்யப்படவில்லை.
ஊராட்சியில், 70 லட்சம் ரூபாய் வரை நிதி ஆதாரம் உள்ளது. ஆனால், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதிலும் நிர்வாகம் சுணக்கம் காட்டுகிறது.
நிதியை என்ன செய்யப்போகின்றனர் எனத் தெரியவில்லை. இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

