/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் தவிப்பு
/
பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் தவிப்பு
பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் தவிப்பு
பொன்னேரியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் தவிப்பு
ADDED : நவ 10, 2025 11:02 PM
பொன்னேரி: பொன்னேரியில் நேற்று, பகல் முழுதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டதால், பொதுமக்கள், வியாபாரிகள், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வந்தவர்கள் என, பல்வேறு தரப்பினர் கடும் அவதிப்பட்டனர்.
பொ ன்னேரி நகரத்தில், சார் - பதிவாளர், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள், 800க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவற்றிற்கு, பொன்னேரி துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் நடைபெறுகிறது.
நேற்று பகல் முழுதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. அதிகாரிகளை தொடர்பு கொண்டு மின்வெட்டிற்கான காரணம் தெரிந்து கொள்ள முடியாமல் மக்கள் தவித்தனர். பொன்னேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில், பத்திரப் பதிவு செய்ய முடியாமல் பல மணி நேரம் மக்கள் காத்திருந்தனர்.
அலுவலர்களிடம் 'மின்வெட்டு நேரங்களில் மாற்று ஏற்பாடு ஏன் செய்யவில்லை' எனக் கேட்டனர். 'இங்கு ஏன் கேட்கிறீர்கள். மின் வாரிய அலுவலகத்தில் சென்று கேளுங்கள்' என, அலட்சியமாக பதில் அளித்ததால், சார் - பதிவாளர் மற்றும் அங்குள்ள அலுவலர்களிடம் பொது மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாள் முழுதும் தொடர்ந்த திடீர் மின்வெட்டால், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், வியாபாரிகள், குடியிருப்பு மக்கள் கடும் அவதிப்பட்டனர். மாலை 6:30 மணிக்கு மின்சாரம் சீரானதை தொடர்ந்து நிம்மதி அடைந்தனர்.
விவசாய நிலங்களில், நான்கு இடங்களில் உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து விழுந்ததை தொடர்ந்து, அவற்றை சரிசெய்வதற்கான பணிகள் நடைபெற்றதால், மின்வெட்டு ஏற்பட்டதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

