/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீருடன் கலந்து ஓடும் கழிவுநீரால் மக்கள் தவிப்பு
/
மழைநீருடன் கலந்து ஓடும் கழிவுநீரால் மக்கள் தவிப்பு
மழைநீருடன் கலந்து ஓடும் கழிவுநீரால் மக்கள் தவிப்பு
மழைநீருடன் கலந்து ஓடும் கழிவுநீரால் மக்கள் தவிப்பு
ADDED : டிச 04, 2025 05:17 AM

சென்னை: சென்னையின் பல இடங்களில், மழைநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதால், பகுதிமக்கள் அவதிப்படுகின்றனர்.
'டிட்வா' புயல் மழையால், சென்னையின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அந்த இடங்களில் ராட்சத மோட்டார், டிராக்டர் வைத்து வெள்ளம் அகற்றப்பட்டு, அங்குள்ள பிரதான வடிகால்வாய்கள் மற்றும் மழைநீர், கழிவுநீர் வடிகால்வாய்களில் விடப்படுகிறது.
அதனால், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, அவற்றின் மூடி வழியாக வெளியேறி, சாலையில் தேங்கியுள்ள மழைநீருடன் கலந்துள்ளது. இதனால், பல இடங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கடும் துர்நாற்றம் வீசுவதால், சாலையில் நடந்து செல்ல பலரும் அவதிப்படுகின்றனர்.
கோடம்பாக்கம், அக்பராபாத் ஒன்றாவது தெருவில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தவிக்கின்றன.
அரும்பாக்கம், அசோகா நகர், இந்திரா காந்தி தெரு, மாரியம்மன் தெரு, சக்தி நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடுகளில் கழிவுநீர் அடைப்பு உள்ளது. அதேபோல், வீடுகளுக்குள் சாக்கடை நீர் பொங்கி வழிந்தோடுகிறது.
மேடவாக்கம் அருகே சித்தேரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், அணை ஏரிக்கு செல்ல சரியாக மூடு வடிகால்வாய் இல்லாததால், ஏரியில் கலக்கும் கழிவுநீரும் சேர்ந்து, இப்பகுதியில் சுகாதார சீர்கேடை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முழுதும் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு, குடிநீர் வாரியம் விரைந்து தீர்வு காண வேண்டும் என, பகுதிமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

