/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம்... கைவிடப்பட்டது
/
பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம்... கைவிடப்பட்டது
பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம்... கைவிடப்பட்டது
பெரியபாளையம் புறவழிச்சாலை திட்டம்... கைவிடப்பட்டது
ADDED : செப் 08, 2025 11:35 PM

ஊத்துக்கோட்டை, பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய இருந்த புறவழிச்சாலை திட்டம் கைவிடப்பட்டதால், தேர்வாய் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் எடுத்துவர தாமதம் ஏற்படுகிறது. இதனால், உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம், மஞ்சங்காரணை, கன்னிகைப்பேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், ஊத்துக்கோட்டை மற்றும் இணைப்பு சாலை வழியே, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இச்சாலை மார்க்கத்தில், சூளைமேனியில் இருந்து வலதுபுறம் செல்லும் சாலையில், தேர்வாய்கண்டிகை உள்ளது. இங்கு, 2010ம் ஆண்டு 1,127 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது, 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வருகின்றன. அதன்பின், தேர்வாய்கண்டிக்கைக்கு எடுத்து வரப்படுகிறது.
இங்கு உற்பத்தியாகும் பொருட்கள், சென்னை துறைமுகம் சென்று, அங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், அண்டை மாநிலங்களுக்கும் செல்கிறது.
தேர்வாய்கண்டிகையில் இருந்து சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும், ஊத்துக்கோட்டை - ஜனப்பன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை வழியே பயணிக்கின்றன.
இந்த மார்க்கத்தில் பிரசித்தி பெற்ற பெரியபாளையம் பவானியம்மன் கோவில் உள்ளது. இங்கு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்ய வருவர்.
இங்கு, ஆடி மாத விழா, முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 14 வாரங்கள் நடைபெறும். இதனால், அதிகளவிலான வாகனங்கள் பெரியபாளையத்திற்கு படையெடுக்கும். அப்போது, இச்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கும்.
இதனால், மக்கள் அதிகளவு பாதிக்கும் நிலையில், தேர்வாய்கண்டிகைக்கு மூலப்பொருட்கள் எடுத்து வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி தாமதமாக வருகின்றன. மேலும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் எடுத்து செல்வதிலும் இதே நிலை தொடர்கிறது. இதனால், உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரியபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, புறவழிச் சாலை திட்டம் தயார் செய்யப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் இருந்த சாலை, தேசிய நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால், மாநில நெடுஞ்சாலைத் துறை இத்திட்டத்தை கைவிட்டது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறை தான் முடிவெடுக்க வேண்டும். - மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி, கும்மிடிப்பூண்டி.