/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தென்மண்டல கபடி போட்டி பெரியார் பல்கலை முதலிடம்
/
தென்மண்டல கபடி போட்டி பெரியார் பல்கலை முதலிடம்
ADDED : நவ 03, 2025 10:30 PM

சென்னை:  தென்மண்டல கபடி போட்டியில், தமிழகத்தின் பெரியார் பல்கலை அணி, முதலிடத்தை கைப்பற்றி வெற்றி பெற்றது.
இந்திய பல்கலை சங்கங்களின் ஆதரவில், சென்னை விநாயகா மிஷன் பல்கலை சார்பில், தென்மண்டல பல்கலைகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி, பையனுாரில் உள்ள பல்கலை வளாகத்தில், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.
இப்போட்டியில், தமிழகம் உட்பட தென்மாநில அளவிலான, 70 பல்கலை அணிகள் பங்கேற்றன. அனைத்து நாக் அவுட் போட்டிகள் முடிவில், தமிழகத்தின் பெரியார், விநாயகா மிஷன், பாரதியார், அன்னை தெரசா உள்ளிட்ட நான்கு பல்கலை அணிகள் வெற்றி பெற்று, லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
லீக் சுற்றில், பெரியார் பல்கலை 50 - 23 என்ற புள்ளிக்கணக்கில் விநாயகா மிஷன் அணியையும், பாரதியார் பல்கலை, 51 - 31 என்ற புள்ளிக்கணக்கில் அன்னை தெரசா பல்கலையையும் வீழ்த்தின.
மற்ற போட்டிகளில், பெரியார் பல்கலை, 60 - 27 என்ற புள்ளிக்கணக்கில் அன்னை தெரசா பல்கலையையும், பாரதியார் பல்கலை 47 - 25 என்ற புள்ளிக்கணக்கில் விநாயகா மிஷன் பல்கலையையும் தோற்கடித்தன.
இறுதியாக நடந்த லீக் சுற்றில் பெரியார் பல்கலை அணி, பாரதியார் பல்கலை அணி மோதிய ஆட்டம் டிராவில் முடிந்ததால், சிறப்பு விதிமுறைகளின்படி, பெரியார் பல்கலை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அனைத்து போட்டிகள் முடிவில், பெரியார் பல்கலை முதலிடத்தையும், பாரதியார் பல்கலை இரண்டாமிடத்தையும், அன்னை தெரசா பல்கலை, விநாயக மிஷன் பல்கலை முறையே மூன்று மற்றும் நான்காமிடத்தையும் கைப்பற்றின.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, சர்வதேச கபடி வீரர் மணத்தி கணேசன், விநாயகா மிஷன் பல்கலையின் பதிவாளர் நாகப்பன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உடன், பல்கலையின் உடற்கல்வித்துறை இயக்குனர் ஓம்பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

