/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்பு பாதைகள் ஆக்கிரமிப்பு பொன்னேரி சப் - கலெக்டரிடம் மனு
/
குடியிருப்பு பாதைகள் ஆக்கிரமிப்பு பொன்னேரி சப் - கலெக்டரிடம் மனு
குடியிருப்பு பாதைகள் ஆக்கிரமிப்பு பொன்னேரி சப் - கலெக்டரிடம் மனு
குடியிருப்பு பாதைகள் ஆக்கிரமிப்பு பொன்னேரி சப் - கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 22, 2025 09:23 PM
பொன்னேரி:ஏரிக்கரையோரம் குடிசை வீடுகளில் வசித்து வருவோர் பயன்படுத்தி வரும் பாதைகளை தனி நபர்கள் ஆக்கிரமித்து வருவதாக கூறி, பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குடியிருப்புகளில் வசிப்போர் மனு அளித்தனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஓ., நகர் ஏரிக்கரை பகுதியில், 80க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வசித்து வருகின்றனர்.
இவர்கள் குடியிருப்புகளை சுற்றிலும் விவசாய நிலங்கள் இருந்தன. அவற்றின் வழியாக பொன்னேரி நகரப்பகுதிக்கு சென்று வந்தனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், மேற்கண்ட விவசாய நிலங்கள் வீட்டு மனைப் பிரிவுகளாக மாற்றப்பட்டன. அதற்காக அமைக்கப்பட்ட சாலைகள், ஏரிக்கரை வரை இருந்தன.
இதனால், ஏரிக்கரையில் வசிப்போர், வீட்டுமனைகளுக்காக அமைக்கப்பட்ட சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
மேற்கண்ட தெருச்சாலைகளை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, ஏரிக்கரையில் வசிப்பவர்களுக்கான பாதையை மறித்து வருகின்றனர். இதனால், அங்குள்ள மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தற்போது, தனிநபர் ஒருவர் சாலையை மறித்து, சுற்றுச்சுவர் கட்டி வருவதாகவும், அதை தடுக்க வேண்டும் எனக்கூறி, நேற்று ஏரிக்கரையில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
வீட்டுமனைகளுக்காக அமைக்கப்பட்ட சாலைகள், நாங்கள் வசிக்கும் பகுதி வரை உள்ளது. ஆனால், அந்த சாலையை நாங்கள் பயன்படுத்தக்கூடாது என, தனிநபர்கள் கூறி சுற்றுச்சுவர் அமைக்கின்றனர்.
இதன் காரணமாக, நாங்கள் வசிக்கும் பகுதியை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்படும். எனவே, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

