/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்நடை மருத்துவமனைகளில் மாத்திரைகள்...தட்டுப்பாடு:விவசாயிகள் விலை கொடுத்து வாங்கும் அவலம்
/
கால்நடை மருத்துவமனைகளில் மாத்திரைகள்...தட்டுப்பாடு:விவசாயிகள் விலை கொடுத்து வாங்கும் அவலம்
கால்நடை மருத்துவமனைகளில் மாத்திரைகள்...தட்டுப்பாடு:விவசாயிகள் விலை கொடுத்து வாங்கும் அவலம்
கால்நடை மருத்துவமனைகளில் மாத்திரைகள்...தட்டுப்பாடு:விவசாயிகள் விலை கொடுத்து வாங்கும் அவலம்
ADDED : ஆக 25, 2024 01:58 AM
திருவள்ளூர் மாவட்டத்தில், கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் போதிய மருந்து, ஊசிகள் இல்லாததால் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், பணம் கொடுத்து மருந்து கடைகளில் வாங்கி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி மற்றும் அம்பத்துார் ஆகிய இடங்களில் கால்நடை துறையின் உதவி இயக்குனர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. மொத்தம், 1.50 லட்சம் விவசாயிகள் கால்நடைகள் வளர்த்து பராமரித்து வருகின்றனர்.
இதில், 3.33 லட்சம் கறவை பசுக்கள் மற்றும் மாடுகள், 2.42 லட்சம் ஆடுகள், 63 ஆயிரத்து 164 செம்மறி ஆடுகள், 7.56 லட்சம் கோழிகள் அடங்கும்.
இது தவிர, நாய், பூனை, பன்றி போன்ற 773 விலங்குகளுக்கு கால்நடை துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தடுப்பூசி
ஐந்து கால்நடை மருத்துவமனைகள், 88 கால்நடை மருந்தகங்கள், 36 கிளை நிலையங்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது.
தவிர, ஒன்றியத்திற்கு, ஆண்டுக்கு 20 சிறப்பு கால்நடை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம் வீதம் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், மொத்தம், 280 முகாம்கள் நடத்தப்படுகின்றன.
காலை 8:00 மணி முதல், மதியம் 12:00 வரையும், மதியம் 3:00 மணி முதல், மாலை 5:00 மணி வரையும் தினமும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கால்நடைகள் சிகிச்சைக்காக, கால்நடை மருத்துவமனைகளுக்கு தலா, 1.25 லட்சம் ரூபாயும், கால்நடை மருந்தகங்களுக்கு, தலா, 75 ஆயிரம் ரூபாயும், கிளை நிலையங்களுக்கு தலா, 15 -- 25 ஆயிரம் ரூபாய் வரை மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் வாங்குவதற்கு அரசு ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஒதுக்கீடு செய்கிறது.
இந்த தொகையில், திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு மருந்து வாணிப கழகத்தில் இருந்து, ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை அந்தந்த கால்நடை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு மருந்துகள் அனுப்பி வைக்கப்படும்.
கட்டாயம்
தொடர்ந்து, கால்நடை உதவி இயக்குனர், கால்நடை மருத்துவமனை, மருந்தகம் மற்றும் கிளை நிலையங்களுக்கு ஏற்றார் போல் மருந்துகளை வழங்குவார்.
இந்நிலையில், சில மாதங்களாக கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்களில் போதிய மருந்துகள் இருப்பு இல்லை.
இதனால், கால்நடைகளை சிகிச்சைக்காக ஓட்டி வரும் போது, மருத்துவர்கள் 'தற்போது மருந்து, மாத்திரை மற்றும் ஊசிகள் இருப்பு இல்லை, நீங்கள் கடையில் சென்று பணம் கொடுத்து வாங்கி வந்தால் சிகிச்சை அளிக்கிறோம்' என கூறுகின்றனர்.
வேறு வழியில்லாமல், விவசாயிகள் வெளியில் மருந்துகளை வாங்கி கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மேலும், அரசு சார்பில் நடத்தப்படும் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாமிற்கும், போதிய மருந்து, மாத்திரைகள் இல்லாததால், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர்.
பற்றாக்குறை
இது குறித்து மாவட்ட கால்நடை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மூன்று மாதங்களுக்கு மேலாக மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறையாக தான் உள்ளது. ஆனாலும், பிற மருத்துவமனைகளில், தேவையான மருந்துகள், மாத்திரைகள் இருந்தால் பரிமாற்றம் செய்து கொள்கிறோம்.
அனைத்து மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால், வேறுவழியில்லாமல், இருப்பு இல்லாத மருந்து, மாத்திரைகளை வெளியில் வாங்கிக் கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
'ஸ்டாக்' இல்லை
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக, மாடு மற்றும் ஆடுகள் வளர்த்து வருகிறேன். நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளை மருந்தகத்திற்கு ஓட்டிச் செல்வோம். அங்கு பெரும்பாலான மருந்து, மாத்திரைகள் 'ஸ்டாக்' இல்லை, வெளியில் வாங்கி வந்தால் மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என கூறுவதால், வேறு வழியின்றி பணம் கொடுத்து வெளியில் மருந்து வாங்கி வருகிறோம்.
- இ.வெங்கடேசன், மாமண்டூர்.
---- நமது நிருபர் ---