/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் ஓட்டும் சிறுவர்கள் அதிகரிப்பு போலீசார் கண்காணிப்பு அவசியம்
/
கார் ஓட்டும் சிறுவர்கள் அதிகரிப்பு போலீசார் கண்காணிப்பு அவசியம்
கார் ஓட்டும் சிறுவர்கள் அதிகரிப்பு போலீசார் கண்காணிப்பு அவசியம்
கார் ஓட்டும் சிறுவர்கள் அதிகரிப்பு போலீசார் கண்காணிப்பு அவசியம்
ADDED : அக் 29, 2025 10:11 PM
திருவாலங்காடு: திருவாலங்காடு மற்றும் சுற்றுப்பகுதியில், சிறுவர்கள் பைக் மற்றும் கார் ஓட்டுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபகாலமாக சிறுவர்கள் பைக், கார் ஓட்டி வருகின்றனர். மோட்டார் வாகன விதிப்படி, பைக் மற்றும் கார் ஓட்ட வேண்டுமெனில், 18 வயது நிறைவடைய வேண்டும்.
ஆனால், பெற்றோர் பலரும், தங்கள் மகன் அல்லது மகள், சிறு வயதில் கார், பைக் ஓட்டுவதை பெருமையாக கருதி, வாகனங்களை ஒப்படைக்கின்றனர்.
திருவாலங்காடு மற்றும் அதை சுற்றியுள்ள கனகம்மாசத்திரம், மணவூர், சின்னம்மாபேட்டையில், பைக் மற்றும் கார் ஓட்டும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலும், ஹெல்மெட் அணியாமலும் ஒன்றிற்கும் மேற்பட்ட நண்பர்களை பைக்கின் பின்னால் அமர வைத்துச் செல்கின்றனர். இது ஒருபுறமிருக்க, நெரிசல் மிக்க சாலைகளில், சிறார்கள் அதிகளவில் கார் ஓட்டிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மாணவர்கள் பைக் ஓட்டக் கூடாது என, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர் சந்திப்பு கூட்டங்கள் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசாரும் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகின்றனர்.
இதை, பெரும்பாலான மாணவர்களும், பெற்றோரும் மதிப்பதில்லை. அதிவேகமாக பைக் மற்றும் கார் ஓட்டும் சிறார்கள், மற்ற வாகன ஓட்டுநர்களை பதற வைக்கின்றனர். பைக்கை மடக்கிப் பிடிக்க முற்படும் போலீசார், இனி கார்கள் மீதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக், கார் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

