/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்டுகொள்ளாத போலீசார் அலட்சியம் 3 மாதங்களில் நடந்த 19 விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
/
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்டுகொள்ளாத போலீசார் அலட்சியம் 3 மாதங்களில் நடந்த 19 விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்டுகொள்ளாத போலீசார் அலட்சியம் 3 மாதங்களில் நடந்த 19 விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்டுகொள்ளாத போலீசார் அலட்சியம் 3 மாதங்களில் நடந்த 19 விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு
ADDED : ஏப் 29, 2025 09:56 PM

திருவாலங்காடு : நகரம் முதல் கிராமங்கள் வரை சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. மேலும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவதால் மூன்று மாதங்களில், 19 விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, இதை கட்டுப்படுத்த காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்டு ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பொன்னேரி, பூந்தமல்லி உட்பட ஆறு நகராட்சிகள், திருமழிசை, பள்ளிப்பட்டு உட்பட ஒன்பது பேரூராட்சிகள், 526 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 40 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இப்பகுதிகளில், சமீபகாலமாக சிறுவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது அதிகரித்துள்ளது. 18 வயதுக்கு முன்பே இருசக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு பெற்றோர் கற்றுக் கொடுக்கின்றனர்.
மேலும், 18 வயது நிறைவடையாத சிறுவர்கள் வாகனங்களை இயக்கும் போது, வயது கோளாறு, ஆர்வத்தின் காரணமாக, அதிவேகமாக இயக்கி விபத்துகளை ஏற்படுத்துகின்றனர். இதில், காயமடைந்து கை, கால்கள் இழக்கின்றனர். சம்பவ இடத்திலேயே சிலர் உயிரிழக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட திருவாலங்காடு, கனகம்மாசத்திரம், திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில், 13 - 17 வயதுள்ள சிறுவர்கள் பலர், 'ஹெல்மெட்' கூட அணியாமல், இருசக்கர வாகனங்களில் அதிகேவகமாக செல்கின்றனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் மூன்று மாதங்களில் மட்டும், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால், 19 விபத்துகள் ஏற்பட்டுள்ளது. அதில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
தண்டனை என்ன?
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன்படி, ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் இருசக்கர வாகனம் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு.
'தங்களுக்கு எதுவும் தெரியாது; சின்ன பையன்; தெரியாமல் செஞ்சுட்டான்' எனக் கூறி தப்பிக்க முடியாது. உரிமம் இல்லாத சிறுவனுக்கு இருசக்கர வாகனம் கொடுத்ததற்காக, பெற்றோர் அல்லது பாதுகாவலர், வாகன உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம், மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
மேலும், சிறார்கள் விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் பதிவும், 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். அதன்பின், புதிதாக வாகன பதிவு செய்ய வேண்டி இருக்கும். அத்துடன், வாகனம் ஓட்டிய சிறார்கள் 25 வயது வரை எவ்வித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சிறுவர்கள் பலர் இருசக்கர வாகனங்களை இயக்குவதை காண முடிகிறது. அவ்வாறு செல்லும் சிறுவர்களை, போலீசார் எச்சரித்து மட்டும் அனுப்புவதால், அச்சமின்றி அடுத்த முறை வாகனங்களை எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.
அவர்களால் ஏற்படும் விபத்தில், வாகன ஓட்டிகள் பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. எனவே, காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், 'பெற்றோர்கள் சிறுவர்களுக்கு வாகனங்கள் கொடுக்க கூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.