/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
62 கி.மீ., 17 ரயில் நிலையங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்... ஒண்ணே ஒண்ணு!: கும்மிடி மார்க்கத்தில் பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
/
62 கி.மீ., 17 ரயில் நிலையங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்... ஒண்ணே ஒண்ணு!: கும்மிடி மார்க்கத்தில் பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
62 கி.மீ., 17 ரயில் நிலையங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்... ஒண்ணே ஒண்ணு!: கும்மிடி மார்க்கத்தில் பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
62 கி.மீ., 17 ரயில் நிலையங்களுக்கு போலீஸ் ஸ்டேஷன்... ஒண்ணே ஒண்ணு!: கும்மிடி மார்க்கத்தில் பயணியர் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : நவ 17, 2025 03:13 AM

பொன்னேரி: கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், 62 கி.மீ.,யில் உள்ள 17 ரயில் நிலையங்களுக்கு, ஒரேயொரு ரயில்வே காவல் நிலையம் இருப்பதால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண்பதில் சுணக்கம் ஏற்படுவதுடன், 1.50 லட்சம் பயணியரின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில், கொருக்குப்பேட்டையில் ரயில்வே காவல் நிலையம் அமைந்துள்ளது.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பாதைகளில் ஏற்படும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கவும், குற்றங்களை தடுப்பதற்கும், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமான மாநில அரசின் காவல் பிரிவாக செயல்படுகிறது.
மேற்கண்ட ரயில்வே காவல் நிலையம் அமைந்துள்ள கொருக்குப்பேட்டையில் இருந்து ஆரம்பாக்கம் வரை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், அத்திப்பட்டு, எண்ணுார் உள்ளிட்ட 17 ரயில் நிலையங்கள் உள்ளன.
கொருக்குப்பேட்டை - ஆரம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையேயான துாரம், 62 கி.மீ., ஆக உள்ளது. மொத்தமுள்ள 17 ரயில் நிலையங்கள் மற்றும் 62 கி.மீ., தொலைவிற்கு ஒரேயொரு ரயில்வே காவல் நிலையம் மட்டுமே உள்ளது.
ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களின் எல்லை மற்றும் ரயில் பயணங்களின்போது ஏற்படும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களால் பாதிக்கப்படும் பயணியர், 30 - 62 கி.மீ., பயணித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
அதேபோல, ரயில்களில் அடிபட்டு இறப்பவர்களின் சடலங்களையும், மாநில ரயில்வே போலீசார் தான் மீட்டு விசாரணை மேற்கொள்ள வேண்டும். போலீசார் வரும் வரை சடலங்கள் தண்டவாளங்களில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.
சில நேரங்களில் சிதறி கிடக்கும் உடல்களின் பாகங்களை நாய்கள் கவ்வி செல்லும் நிலையும் உள்ளது. நள்ளிரவில் நடைபெறும் சம்பவங்களுக்கு, அதிகாலையில் தான் சடலங்களை மீட்கும் நிலை உள்ளது.
மேலும், 99625 00500 அவசர உதவிக்கான எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்தால், கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வருவதற்கே, ஒன்று முதல் இரண்டு மணி நேரம் ஆகிறது.
இதனால், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், தினமும் பயணிக்கும் 1.50 லட்சம் பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
பயணியரின் பாதுகாப்பு கருதியும், எளிதாக புகார் கொடுக்கவும், உடனே போலீசார் பாதுகாப்பு கிடைக்கவும், கூடுதல் ரயில்வே காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என, பயணியர் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால், தினம் தினம் பயணியர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து, ரயில் பயணியர் சங்கத்தின் செயலர் தனுஷ்கோடி கூறியதாவது:
ரயில்வே காவல் நிலையம், எளிதில் அணுக முடியாத துாரத்தில் இருப்பதால், சிறு சிறு வழிப்பறி சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளுக்கு பயணியர் புகார் கொடுக்க செல்வதில்லை. இதை, வழிப்பறி திருடர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
திருநங்கையர் தொல்லையும் அதிகளவில் உள்ளது. அவர்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில்வே ஐ.ஜி.,யிடம் சென்று புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த மார்க்கத்தின் வடக்கு பகுதியில், எண்ணுார் - ஆரம்பாக்கம் வரை உள்ள ரயில் நிலையங்களின் நடுவே உள்ள மீஞ்சூரில், மாநில அரசின் ரயில்வே காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
எனவே, தமிழக அரசு கவனம் செலுத்தி, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கூடுதல் ரயில்வே காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

