/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் புகார் மீதான நடவடிக்கையில் போலீசார்... குறட்டை 2 மாதங்களில் 50 இடங்களில் மின் ஒயர்கள் திருட்டு
/
விவசாயிகள் புகார் மீதான நடவடிக்கையில் போலீசார்... குறட்டை 2 மாதங்களில் 50 இடங்களில் மின் ஒயர்கள் திருட்டு
விவசாயிகள் புகார் மீதான நடவடிக்கையில் போலீசார்... குறட்டை 2 மாதங்களில் 50 இடங்களில் மின் ஒயர்கள் திருட்டு
விவசாயிகள் புகார் மீதான நடவடிக்கையில் போலீசார்... குறட்டை 2 மாதங்களில் 50 இடங்களில் மின் ஒயர்கள் திருட்டு
ADDED : மே 26, 2025 11:27 PM

பொன்னேரி, விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை மோட்டார்களின் மின் ஒயர்கள் திருடுபோவதால், சொர்ணவாரி பருவத்திற்கு நடவுப்பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களில், 50க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று, அதுகுறித்த புகார்கள் மீது போலீசாரின் நடவடிக்கை எதுவும் இல்லாததால், விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் சம்பா, சொர்ணவாரி பருவங்களில், 45,000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. மாவட்டத்திலேயே அதிகளவில் நெல் விவசாயம் செய்யப்படும் பகுதியாக உள்ளது.
தற்போது, சொர்ணவாரி பருவத்திற்கு விவசாயிகள் விளைநிலங்களை உழுது தயார்படுத்தி வருகின்றனர். அடுத்த சில நாட்களில் நடவுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
விவசாயம் பாதிப்பு
இந்நிலையில், விவசாய நிலங்களில் ஆழ்துளை மோட்டார்களுக்கு செல்லும் மின் ஒயர்கள் திருடுபோகும் சம்பவங்கள் தொடர்வதால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி அடுத்த ஆசானபூதுார், மடிமைகண்டிகை, வீரங்கிமேடு உள்ளிட்ட கிராமங்களில் ஆழ்துளை மோட்டார்கள் உதவியுடன், விவசாயத்திற்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
சமூக விரோதிகள், மோட்டார் அறைகளின் பூட்டை உடைத்து, அங்குள்ள காப்பர் ஒயர்களை அறுத்து திருடி செல்கின்றனர். மேற்கண்ட கிராமங்களில், இரண்டு மாதங்களில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின் மோட்டார் ஒயர்கள் திருடு போயுள்ளன.
காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
நடவடிக்கை இல்லை
காவல் நிலையத்தில் புகார் அளித்தால், எங்களை மோட்டார் அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த சொல்கின்றனர். மேலும், திருடியது யார் என விசாரித்து தெரிவிக்கவும் கூறுகின்றனர்.
மோட்டார் ஒயர்கள் திருடுபோவதால், விவசாயம் மேற்கொள்வதே சிரமமாக உள்ளது. காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. ரோந்து வாகனங்கள் பொன்னேரி நகரத்தையே சுற்றி வருகின்றன. கிராமப்புற பகுதிகளுக்கு வந்தால் தானே குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவுப்பணிகள் பாதிப்பு
பொன்னேரியை சுற்றியுள்ள கோளூர், பெரியகரும்பூர், தேவம்பட்டு என, பல்வேறு கிராமங்களில் இதே நிலைதான் தொடர்கிறது. மோட்டார் அறைகளில் உள்ள மின்சாதனப் பொருட்களையும் உடைத்துவிட்டு செல்கின்றனர். மோட்டார் ஒயர்கள் திருடுபோவதால், ஆழ்துளை மோட்டார்களை வெளியில் எடுத்து தான் மீண்டும் புதிய ஒயர்களை பொருத்த முடியும். இதற்கு, இரண்டு நாட்கள் வரை வீணாகும் நிலை உள்ளது.
அதுவரை நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது உழவு, நடவுப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையிடம் புகார் தெரிவித்தாலும் நடவடிக்கை இல்லை. ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு இடையே விவசாயம் செய்து வருகிறோம். தற்போது, இந்த பிரச்னையும் தொடர்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.ராமு, தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், திருவள்ளூர் மாவட்டம்.
திருட்டு சம்பவங்கள் தொடர்பாக வரும் புகார்கள் மீது விசாரணை நடக்கிறது. அந்தந்த பகுதிகளில் உள்ளவர்கள் தான் இதில் ஈடுபடுவர். அதுகுறித்தும் விசாரித்து வருகிறோம். கிராமங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- காவல் துறைஅதிகாரி,
பொன்னேரி.