/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம்...அலட்சியம்! :சுவாசிக்கும் காற்றில் தொழிற்சாலை மாசு துகள்கள் கலப்பு
/
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம்...அலட்சியம்! :சுவாசிக்கும் காற்றில் தொழிற்சாலை மாசு துகள்கள் கலப்பு
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம்...அலட்சியம்! :சுவாசிக்கும் காற்றில் தொழிற்சாலை மாசு துகள்கள் கலப்பு
சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் மாசு கட்டுப்பாட்டு வாரியம்...அலட்சியம்! :சுவாசிக்கும் காற்றில் தொழிற்சாலை மாசு துகள்கள் கலப்பு
ADDED : பிப் 07, 2024 11:51 PM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பகுதிகளில் உள்ள பல தொழிற்சாலைகள், வடிகட்டுதல் முறைக்கு உட்படுத்தாமல், அபாயகரமாக மேற்கூரை வழியாக புகையை வெளியேற்றி வருகின்றன. இதனால் சூழ்ந்துள்ள காற்றில் மாசு துகள்கள் கலந்து, அதை சுவாசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளில், 320 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அவற்றில், 50க்கும் மேற்பட்ட இரும்பு உருக்கு ஆலைகள், நிலக்கரியில் இருந்து மின் உற்பத்தி செய்யும் எட்டு தொழிற்சாலைகள், கார்பன் துகள் தயாரிப்பு தொழிற்சாலை, நச்சு கழிவுகளை சேகரித்து எரிக்கும் நிலையம் என, காற்றில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அதிக அளவில் இயங்கி வருகின்றன.
இந்த தொழிற்சாலைகளில் பெரும்பாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குவதில்லை என்பது பகுதிவாசிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது.
குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் புகை, பல வடிகட்டுதல் முறைகளுக்கு உட்படுத்தி புகை போக்கி வழியாக வெளியேற்ற வேண்டும்.
அதனால் ஏற்படும் பொருளாதார ரீதியிலான நஷ்டத்தை தவிர்க்கும் நோக்கில், அப்படியே மேற்கூரை வழியாக மாசு கலந்த புகையை வெளியேற்றி வருகின்றனர்.
இதனால், புகையுடன் வெளியேறும் கருந்துகள்கள், மக்கள் சுவாசிக்கும் காற்றில் கலக்கிறது. அதை சுவாசிக்கும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலர், உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தினர், இந்த விதிமீறல்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
‛கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு' என்பது போல், மேற்கூரை வழியாக வெளியேற்றப்படும் புகையை காணும் போது மாசு கட்டுப்பாட்டு விதிமீறல்கள் தெளிவாக தெரிகிறது. இருப்பினும், மாவட்ட சுற்றுச்சூழல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கூறுகையில், 'விதிமீறும் தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்' அனுப்பி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருப்பினும் எங்கள் ஆய்வை மேலும் துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
‛மாசு கலந்த காற்றை சுவாசிப்பதால், உடனடி பாதிப்பு ஏற்படாது. தாமதமாக ஏற்படும் பாதிப்புகள் மீது சுற்றியுள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதை சாதகமாக்கி கொண்ட தொழிற்சாலைகள், மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்படுகின்றன. கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிகரித்து வரும் காற்றின் மாசை கட்டுப்படுத்த, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'
எஸ்.சுரேஷ்பாபு,
சுற்றுச்சூழல் ஆர்வலர்,
கும்மிடிப்பூண்டி.

