/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முறையான அறிவிப்பு இல்லாததால் பொன்னேரி ரயில் பயணியர் தவிப்பு
/
முறையான அறிவிப்பு இல்லாததால் பொன்னேரி ரயில் பயணியர் தவிப்பு
முறையான அறிவிப்பு இல்லாததால் பொன்னேரி ரயில் பயணியர் தவிப்பு
முறையான அறிவிப்பு இல்லாததால் பொன்னேரி ரயில் பயணியர் தவிப்பு
ADDED : மார் 06, 2024 10:19 PM
பொன்னேரி:சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் கல்வி, தொழில் தொடர்பாக புறநகர் ரயில்களில் சென்னை சென்று வருகின்றனர்.
இந்த வழித்தடத்தில், புறநகர் ரயில் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில்லை என்ற நிலையில், சமீபகாலமாக பொன்னேரி நிலையத்தில் ரயில்கள் வந்து செல்லும் நேர அறிவிப்பு முறையாக இல்லை என பயணியர் தெரிவிக்கின்றனர்.
நேற்று காலையும் இதேநிலை ஏற்பட்டதால், பயணியர் - ரயில் நிலைய அதிகாரிகள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து ரயில் பயணியர் கூறியதாவது:
கும்மிடிப்பூண்டியில் இருந்து பொன்னேரி ரயில் நிலையம் வழியாக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், சென்னை கடற்கரை ஆகிய நிலையங்களுக்கு புறநகர் ரயில்கள் செல்கின்றன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி வரும் புறநகர் ரயில்கள், பொன்னேரி ரயில் நிலையம் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன், அது எங்கு செல்கிறது, எந்த நடைமேடை என்பது குறித்து நிலைய அதிகாரி ஒலிபெருக்கியில் அறிவிக்க வேண்டும்.
இதை சரிவர மேற்கொள்வதில்லை. இதனால், ரயில்கள் எத்தனை மணிக்கு வரும், எங்கு செல்கிறது என தெரியாமல் குழப்பம் அடைகிறோம்.
ரயில்களின் முகப்பில் மட்டுமே, அது சென்று சேரும் இடம் குறித்த தகவல் இருக்கும். பயணியர் கவனிக்கவில்லை என்றால் குழப்பம் ஏற்படுகிறது.
நிலைய அதிகாரியை கேட்டால், அவரிடம் பயணியருக்கு உரிய மரியாதை இல்லை. வடமாநில மொழியில் அலட்சிய பதிலே வருகிறது.
ஏற்கனவே, இந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் காலதாமதத்துடன் செல்கின்றன. பொன்னேரி - சென்னை சென்ட்ரலுக்கு, 33 கி.மீ., தொலைவு துாரத்தை கடக்க, இரண்டு மணி நேரம் பயணிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில், ரயில்கள் குறித்து சரியான அறிவிப்பு இல்லாமல், அவற்றை தவறவிடும் சூழல் நிலவுகிறது. பொன்னேரி ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் நேர அறிவிப்புகளை, சரியான நேரத்திலும் தமிழ், ஆங்கிலத்திலும் தெரிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

