/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
/
விசைத்தறி நெசவாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
ADDED : பிப் 11, 2024 11:13 PM
பொதட்டூர்பேட்டை: திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி தாலுகாவில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விசைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 10 ஆண்டுகளாக கூலி உயர்வு குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வருவாய் துறை சார்பில், துணி ரக உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்களிடையே அவ்வப்போது சமரச பேச்சு நடத்தப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் மீண்டும் கூலி உயர்வு குறித்த ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தனர். தீர்வு ஏதும் எட்டப்படாத நிலையில், இன்று 12ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய உத்தேசித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை தொழில் ஆண்டின் துவக்கமாக கொண்டு தொழில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 19ம் தேதி கணபதி பூஜை நடத்தி நெசவு தொழிலில் புது கணக்கு துவங்க தேதி குறிக்கப்பட்டுள்ளது. இதற்கான துண்டு பிரசுரங்கள், பொதட்டூர்பேட்டையில் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.