தனி நபருக்காக சட்டத்தை திருத்தும் தமிழக அரசு: ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஓயாத சலுகை!
தனி நபருக்காக சட்டத்தை திருத்தும் தமிழக அரசு: ஓய்வு பெற்ற அதிகாரிக்கு ஓயாத சலுகை!
ADDED : ஆக 10, 2025 07:45 AM

போக்குவரத்து குழுமமான, 'கும்டா'வில் தொடர வேண்டும் என்பதற்காக, விருப்ப ஓய்வில் வந்த ரயில்வே அதிகாரிக்காக, சட்டத்திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில், பஸ், ரயில், மெட்ரோ ரயில் என, பொது போக்குவரத்து சேவைகள் செயல்பாட்டில் உள்ளன.
'சீப் பிளானர்' மத்திய அரசின் அறிவுரைப்படி, 'கும்டா' என்ற ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம், 2010ல் துவக்கப்பட்டது. இந்த குழுமத்தின் முதல் கூட்டம், 2012ல் நடந்தாலும், நிர்வாக அமைப்பு ஏற் படுத்தப்படாததால், குழு ம பணிகள் முடங்கின.
குழுமத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தும் வகையில், அதன் தலைவராக, முதல்வர் இருக்கும் வகையில், 2021ல் சட்டத்திருத்தம் செய்யப் பட்டது.
இக்குழுமத்தின் உறுப்பினர் செயலராக, சி.எம்.டி.ஏ.,வில் போக்குவரத்து திட்டங்களை கவனிக்கும், 'சீப் பிளானர்' இருப்பார் என்று, தெரிவிக்கப் பட்டது.
இதன்படி, சி.எம்.டி.ஏ., சீப் பிளானர் ஒருவர், போக்குவரத்து குழுமம் தொடர்பான பணிகளை கவனித்து வந்தார். அவர் ஓய்வு பெற்ற நிலையில், கும்டாவில் உறுப்பினர் செயலர் பணியிடம் காலியாக இருந்தது.
அயல் பணி இந்நிலையில், தெற்கு ரயில்வேயை சேர்ந்த ஐ.ஜெயகுமார், அயல்பணி அடிப்படையில், போக்குவரத்து குழும சிறப்பு அலுவலராக, 2022 ஜூனில் நியமிக்கப் பட்டார்.
அதேநேரம், கும்டாவில் உறுப்பினர் செயலர் இடம் காலியாக இருந்ததால், அந்த பொறுப்பையும் அரசின் அனுமதி பெற்று, ஜெயகுமாரே கவனித்து வந்தார்.
இவரது அயல்பணி காலம் கடந்த மாதம், 31ல் முடிந்தது. இருப்பினும், கும்டா சிறப்பு அலுவலராக தனக்கு பணி நீட்டிப்பு பெற, இவர் முயற்சித்தார். ரயில்வே மற்றும் தமிழக அரசு தரப்பில், இதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, இவரை பழைய துறைக்கு திரும்புமாறு, ரயில்வே துறை அறிவுறுத்தியது. ஆனால், ரயில்வே துறைக்கு திரும்ப விரும்பாமல், இவர் விருப்ப ஓய்வில் செல்ல ரயில்வேயில் விண்ணப்பித்தார்.
இந்நிலையில், சிறப்பு அலுவலர் பதவி முடிந்த நிலையில், ரயில்வே துறையில் இருந்து விருப்ப ஓய்வில் விடுவிக்கப்பட்டதாக கூறி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஆலோசகர் பதவி கேட்டு, ஜெயகுமார் விண்ணப்பித்தார்.
அதன் அடிப்படையில், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் ஆலோசகராக, ஆகஸ்ட், 1ல் பணியில் சேர்ந்துள்ளார். இதில், அவருக்கு மெட்ரோ ரயில் - மேம்பால ரயில் இணைப்பு பணிகளை கவனிக்கும் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கவனிப்பதற்காக என்று கூறி, அவர் மீண்டும் கும்டா அலுவலகத்தில் இடம்பிடித்து அமர்ந்துள்ளாராம்.
குழப்பம் சிறப்பு அலுவலர், உறுப்பினர் செயலர் ஆகிய பொறுப்புகளில் இல்லாமல், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ஆலோசகர் என்ற பெயரில், கும்டா அலுவலகத்தில், அவர் அமர்ந்து இருப்பது, அதிகாரிகளிடம் ஆச்சரியத்தையும் கு ழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஓய்வு பெற்ற ஜெயகுமாரை மீண்டும் சிறப்பு அலுவலர் அல்லது உறுப்பினர் செயலராக நியமிக்க வேண்டும் என்றால், போக்குவரத்து குழும சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு சட்டத்திருத்தம் செய்ய, முதல்வர் தலைமையில் குழுமத்தின் முழுமையான கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இதற்கான கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள், சட்டத்திருத்தத்துக்கான காரணங்களை தயாரித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
அனுமதிக்கப்பட்ட பணி காலத்துக்கு அப்பால், கும்டாவில் இருக்க வேண்டும் என, அந்த குறிப்பிட்ட அதிகாரிக்கு ஏற்பட்டுள்ள தீராத காதல், உயர் அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு தனி நபருக்காக சட்டத்தில் திருத்தம் செய்ய, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை தயாராவதும் வியப்பை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.