/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விசைத்தறி நெசவாளர்களின் கூலி உயர்வு பேச்சு தோல்வி
/
விசைத்தறி நெசவாளர்களின் கூலி உயர்வு பேச்சு தோல்வி
ADDED : பிப் 15, 2024 01:46 AM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய ஒன்றியங்களில், 75,000த்திற்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்கள் உள்ளனர்.
இவர்கள் லுங்கி, இலவச வேட்டி, சேலை போன்ற துணிகளை உற்பத்தி செய்து, ஏஜன்டுகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.
குறிப்பாக, லுங்கி ரகங்கள் தயாரிக்க விசைத்தறி நெசவாளர்கள், ஏஜன்டுகளிடம் இருந்து நூல், பாவு பெற்று உற்பத்தி செய்து, மீட்டர் கணக்கில் கூலி பெற்று வருகின்றனர். இந்நிலையில், விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், 10 ஆண்டுகளாக கூலி உயர்த்தாமல் ஏஜன்டுகள் பழைய கூலி வழங்கி வந்தனர்.
இதையடுத்து, நெசவாளர்கள் கூலி உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி, மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று திருத்தணியில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தீபா தலைமையில், திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் தமிழ்மாறன் முன்னிலையில் நெசவாளர்கள்- ஏஜன்டுகள் இடையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், நெசவாளர்கள் மற்றும் ஏஜன்டுகள் சார்பில், தலா 10 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை முடிவில் நெசவாளர்கள் கோரிக்கைகளை ஏற்க ஏஜன்டுகள் மறுத்து விட்டதால், தோல்வியில் முடிந்தது.
மீண்டும் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை, வரும் 21ம் தேதி நடைபெறும் என, கோட்டாட்சியர் தீபா தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையின் போது, கோட்டாட்சியர் அலுவலகத்தில், 1,500க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் குவிந்திருந்தனர்.

