/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுகாதார நிலையம் இடம் மாற்றம் கண்டித்து கர்ப்பிணியர் போராட்டம்
/
சுகாதார நிலையம் இடம் மாற்றம் கண்டித்து கர்ப்பிணியர் போராட்டம்
சுகாதார நிலையம் இடம் மாற்றம் கண்டித்து கர்ப்பிணியர் போராட்டம்
சுகாதார நிலையம் இடம் மாற்றம் கண்டித்து கர்ப்பிணியர் போராட்டம்
ADDED : செப் 10, 2025 03:29 AM

திருவேற்காடு:அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளதை கண்டித்து, கர்ப்பிணியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவேற்காடு, காடுவெட்டி, வீரராகவபுரம் பகுதியில் 1967ம் ஆண்டு முதல், அரசு மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. 2013ல் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது.
ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், திருவேற்காடு நகராட்சி மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள மேல்பாக்கம், கண்ணப்பாளையம் உள்ளிட்ட பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
இடநெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மேம்படுத்த, கடந்த 2022ல் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
ஆனால், வீரராகவபுரத்திற்கு ஒதுக்கப்பட்ட 1.20 கோடி ரூபாயில், புலியம்பேடு பகுதியில் புதிதாக நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் முடிந்ததும், வீரராகவ புரத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கு இடம் மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
புலியம்பேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற சுகாதார நிலையம், திருவேற்காடு சுற்றுவட்டார பகுதியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் பொது போக்குவரத்து வசதிகளும் இல்லை.
பொதுமக்கள், வேலப்பன்சாவடியில் இறங்கி, 2 கி.மீ., துாரம் நடந்து செல்ல வேண்டும். இதனால், பல்வேறு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வீரராகவபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவேற்காடு போலீசார் வந்து சமாதானம் செய்த பின் கலைந்து சென்றனர். கர்ப்பிணியர் திடீர் போராட்டத்தால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.