/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 30 - 40 சதவீதம்! கர்ப்ப கால ஊட்டச்சத்து குறைபாடால் பாதிப்பு
/
குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 30 - 40 சதவீதம்! கர்ப்ப கால ஊட்டச்சத்து குறைபாடால் பாதிப்பு
குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 30 - 40 சதவீதம்! கர்ப்ப கால ஊட்டச்சத்து குறைபாடால் பாதிப்பு
குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் 30 - 40 சதவீதம்! கர்ப்ப கால ஊட்டச்சத்து குறைபாடால் பாதிப்பு
UPDATED : மே 29, 2025 07:13 AM
ADDED : மே 28, 2025 10:54 PM

திருவாலங்காடு மாவட்டத்தில் டீன் ஏஜ், வயது முதிர்வு கர்ப்பத்தால், குறைபிரசவங்கள் 30 ----- 40 சதவீதமாக உள்ளதாகவும், அதில், 40 ---- 50 சதவீத குழந்தைகள் பல்வேறு பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றன. கர்ப்ப காலத்தில் உரிய பரிசோதனை செய்வதுடன், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உண்பதன் வாயிலாக, குறைபிரசவத்தை தவிர்க்கலாம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், ஒரு அரசு தலைமை மருத்துவமனை உட்பட 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 68 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 281 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன.
இங்கு, தினமும் 20,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். குறிப்பாக, புறநோயாளிகளாக 300 பேரும், பிரசவத்திற்காக வாரம் 10 பேர் வரை வருகின்றனர்.
மூளை சார்ந்த பிரச்னை
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் மாதந்தோறும், 300 - 400 குழந்தைகள் சிகிச்சைக்கு சேர்க்கப்படுகின்றனர். அதில், 30 - 40 சதவீதம் குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களில், ஆந்திர மாநிலத்தில் பிறந்து, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர்.
பிரசவ கால குழந்தைகள் இறப்புக்கு குறைபிரசவம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில், பிரசவ கால குழந்தைகள் இறப்புகளை குறைக்க, சுகாதார துறை வாயிலாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர்கள் கூறியதாவது:
கருவில், 26 வாரத்துக்கு மேல் தான் நுரையீரல் விரிவடையும். 26 - 32 வாரம் வரையுள்ள குழந்தைகளை, பல்வேறு சவால்களுக்கு மத்தியில் காப்பாற்றி நலமாக அனுப்பியுள்ளோம்.
பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில், மாதந்தோறும் சிகிச்சை பெறும், 300 - -400 குழந்தைகளில், 40 - 50 சதவீத குழந்தைகள் குறைபிரசவம் காரணமாக அனுமதிக்கப்படுகிறது.
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையாக விரிவடையாததால் மூச்சுத்திணறல், மூளை சார்ந்த பிரச்னை, இதயத்தில் பி.டி.ஏ., எனும் பிரச்னை, கிட்னி பாதிப்பு, மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள், குடல் சார்ந்த நோய் என, பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
தற்போது, அரசு மருத்துவமனையில், 1 கிலோவுக்கும் குறைவாக பிறக்கும் குழந்தைகளில், 80 சதவீதம் பேரையும், 1.5 கிலோவுக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளில், 94 சதவீதமும் காப்பாற்றி உள்ளோம். 500 கிராம் மற்றும் அதற்கு கீழுள்ள குழந்தைகளை காப்பாற்றுவது கடினம்.
அதிக வாய்ப்பு
டீன் ஏஜ் கால பிரசவம், 35 வயதுக்கு மேல் பிரசவம், தாய்க்கு நோய் பாதிப்புகள் இருப்பது, கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள், ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை நோய், ரத்த சோகை, இதய மற்றும் நுரையீரல் போன்ற நோய் பாதிப்பு, கர்ப்பப்பை வாய் அளவு குறைவு போன்ற காரணங்களால் குறைபிரசவம் ஏற்படுகின்றன.
கர்ப்ப காலத்தில் உரிய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும், ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதும் அவசியம்.
பிரச்னைகள் இருப்பது முன்கூட்டியே தெரியும் போது, அதற்கேற்ப சிகிச்சைகளை செய்தால், குறைபிரசவத்தை தவிர்க்கலாம்.
முதல் குழந்தை குறைபிரசவம் என்றால், இரண்டாம் குழந்தையும் குறைபிரசவத்தில் பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. 37 வாரத்திற்கு கீழ் பிறக்கும் அனைத்து குழந்தைகளும், குறைபிரசவமாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.