/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேரம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
/
பேரம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
பேரம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
பேரம்பாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை? மாணவர்கள், பெற்றோர் அதிர்ச்சி
ADDED : மே 01, 2025 01:46 AM

பேரம்பாக்கம்:கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடந்த 1974ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் இயங்கும் இந்த மருத்துவமனைக்கு, தற்போது புதிய மருத்துவமனை கட்ட தமிழக அரசு 2 கோடி ரூபாய் ஒதுக்கியது.
ஆனால், பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை நீர்நிலை புறம்போக்கில் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால், சுகாதாரத்துறையினர் புதிய மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேடி அலைந்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வருவாய்த் துறையினர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மருத்துவமனை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்தனர்.
ஏற்கனவே, நீர்நிலை புறம்போக்கில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது அகோரவீரபத்திர சுவாமி கோவிலுக்கு வழங்கிய இடத்தில் பள்ளி அமைந்துள்ள நிலையில், அரசு மருத்துவமனையும் கட்டுவதற்கு வருவாய்த் துறை அதிகாரிகள் பார்வையிட்டது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் அரசு பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியில் மருத்துவமனை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தில், பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக சீரமைப்பு பணி நடந்து வந்தது. இதனால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், மாணவர்களின் சுகாதாரம் மற்றும் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், ''மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி, பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவனை கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் துவங்க சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. கலெக்டர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.