/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புழல் சிறையில் அதிகாரிகளை மிரட்டும் கைதிகள்...அட்டகாசம்!:'போதை' சப்ளை போலீசார் அடுத்தடுத்து 'சஸ்பெண்ட்'
/
புழல் சிறையில் அதிகாரிகளை மிரட்டும் கைதிகள்...அட்டகாசம்!:'போதை' சப்ளை போலீசார் அடுத்தடுத்து 'சஸ்பெண்ட்'
புழல் சிறையில் அதிகாரிகளை மிரட்டும் கைதிகள்...அட்டகாசம்!:'போதை' சப்ளை போலீசார் அடுத்தடுத்து 'சஸ்பெண்ட்'
புழல் சிறையில் அதிகாரிகளை மிரட்டும் கைதிகள்...அட்டகாசம்!:'போதை' சப்ளை போலீசார் அடுத்தடுத்து 'சஸ்பெண்ட்'
UPDATED : டிச 15, 2024 11:29 PM
ADDED : டிச 15, 2024 11:11 PM
சிறைகளில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவற்றை போலீசாரே, 'சப்ளை' செய்வதும், சிறை அதிகாரிகளுக்கு கைதிகள் கொலை மிரட்டல் விடுப்பதும் தொடர் கதையாகிவிட்டது. புழல் சிறையில் கைதிகளுக்கு போதைப்பொருள் வினியோகித்த போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சிறைகளில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. கைதிகள் ஸ்மார்ட் போன் வாயிலாக, வெளியில் உள்ள கூட்டாளிகளுக்கு, வீடியோ அழைப்பில் பேசி, எதிரிகளை தீர்த்துகட்ட 'ஸ்கெட்ச்' போட்டு கொடுக்கின்றனர் என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை உறுதிப்படுத்தும் விதமாக அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்துள்ளன.
சென்னை, புழல் மத்திய சிறையில், 3,000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு, உயர் பாதுகாப்பு பிரிவில், பயங்கரவாதி 'போலீஸ்' பக்ரூதின் மற்றும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தோர் அடைக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன், சிறை கண்காணிப்பு துணை கமிஷனர் தலைமையில், சிறை முழுதும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, சிறை அதிகாரிகளை, 'போலீஸ்' பக்ரூதின் ஆபாசமாக திட்டியும், வெளியில் இருக்கும் தன் கூட்டாளிகள் வாயிலாக தீர்த்துகட்டிவிடுவேன் என, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
அதேபோல், கஞ்சா விற்ற வழக்கில் இரண்டு பெண்களை, சென்னை கொடுங்கையூர் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். அதற்கான உத்தரவு நகலை கொடுக்கச் சென்ற போது, இன்ஸ்பெக்டர் சரவணன் என்பவருக்கு, பெண் கைதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்றும், சிறைக்காவலர் மீது தாக்குதல் நடந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு, பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் 'விரல்' கார்த்திக். கடந்த நவம்பரில், போதை பொருள் வழக்கில், பேசின்பிரிட்ஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை வளாகத்தில் துணி காய வைக்கும் இடத்தில், இவரும், மற்றொரு கைதியும் மோதிக் கொண்டனர்.
இருவரிடமும், சிறை காவலர் பிரபாகரன் விசாரித்தபோது, 'விரல்' கார்த்திக், காவலரின் சட்டையை கிழித்து, கழுத்தில் கையால் குத்தியுள்ளார். சிறை காவலர் கொடுத்த புகாரில், புழல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலீஸ்கார் 'சஸ்பெண்ட்'
இந்நிலையில், புழல் மத்திய சிறையில், தலைமை காவலர் துரையரசன், கைதி சுகுமார் வாயிலாக, கைதிகளுக்கு கஞ்சா பொட்டலம் கொடுத்து அனுப்புவதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறையின் சிறப்பு அலுவலர்கள், கைதி சுகுமாரிடம் விசாரித்தனர்.
அப்போது, 'துரையரசன் என்னிடம் கருப்பு நிற டேப் சுற்றப்பட்ட கஞ்சா பொட்டலத்தை கொடுத்து, அதை மெர்வின் விஜய் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். அதன்படி நான் செய்தேன்' என்றார்.
இதையடுத்து, போதை பொருட்கள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள, சூளைமேடைச் சேர்ந்த மெர்வின் விஜயிடம் சோதனை செய்தனர். இவர், உள்ளாடையில், 48 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்தனர்.
இதன் பின்னணியில், காவலர் துரையரசன் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். கைதிகள் மற்றும் காவலர் துரையரசன் மீது, புழல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, வழக்கு விசாரணைக்காக, கைதிகளை நீதிமன்றங்களுக்கு ஆஜர்படுத்த அழைத்து வரும்போது, அவர்களின் கூட்டாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், கஞ்சா பொட்டலங்களை வீசும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
சமீபத்தில், திருவொற்றியூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி வழியாக, சிறையில் உள்ள தன் கணவருக்கு, மனைவி ஒருவர் கஞ்சா கொடுத்து, போலீசாரிடம் சிக்கினார்.
சிறைகளில், கைதிகளிடம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள், ஸ்மார்ட் போன் புழக்கம் அதிகரிப்பதன் பின்னணியில் காவலர்கள் உள்ளனர். இதுவே, கைதிகள் அத்துமீறலில் ஈடுபட வழி வகுத்துவிடுவதால், சிறைத்துறை அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- நமது நிருபர் -