/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரணி ஆற்று கரைகளில் முள்புதர்கள் கசிவுகளை கண்டறிந்து சீரமைப்பதில் சிக்கல்
/
ஆரணி ஆற்று கரைகளில் முள்புதர்கள் கசிவுகளை கண்டறிந்து சீரமைப்பதில் சிக்கல்
ஆரணி ஆற்று கரைகளில் முள்புதர்கள் கசிவுகளை கண்டறிந்து சீரமைப்பதில் சிக்கல்
ஆரணி ஆற்று கரைகளில் முள்புதர்கள் கசிவுகளை கண்டறிந்து சீரமைப்பதில் சிக்கல்
ADDED : செப் 25, 2024 12:40 AM

பொன்னேரி:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி, தத்தமஞ்சி, பிரளயம்பாக்கம் வழியாக பயணிக்கும் ஆரணி ஆறு பழவேற்காடு கடலில் முடிகிறது.
இந்த ஆறு, பொன்னேரி அடுத்த சின்னகாவணம், லட்சுமிபுரம், கம்மார்பாளையம், பெரிய மனோபுரம், ஆலாடு, சிவபுரம், மனோபுரம் ஆகிய கிராமங்கள் வழியாக பயணிக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், தத்தமஞ்சி, சோமஞ்சேரி, ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கரைகள் உடைந்தன.
ஆற்று நீர் கிராமங்களை சூழ்ந்து பெரும் பாதிப்புளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, தற்போது மேற்கண்ட கிராமங்களில், கான்கிரீட் தடுப்பு சுவர்களுடன் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆற்றின் இருகரைகள் மீதும் முள்செடிகள் காடுபோல் வளர்ந்து கிடக்கின்றன. இவற்றின் வேர்கள் கரைகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் கரைகள் பலவீனம் அடைந்து வருகின்றன.
மேலும் லட்சுமிபுரம் அணைக்கட்டு, ரெட்டிப்பாளையம் தடுப்பணை பகுதிகளிலும் முள்செடிகள் வளர்ந்து கட்டுமானங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.
முள்செடிகளால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகளில் ஏற்படும் நீர்கசிவு, விரிசல் உள்ளிட்டவைகளை முன்கூட்டியே அறிந்து கொள்வது, தொடர் கண்காணிப்பு மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், அருகில் வசிக்கும் கிராமவாசிகள் நீர்கசிவு, உடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டால் உடனடியாக பொதுப்பணி துறைக்கு தகவல் தெரிவிப்பர்.
அதற்கு தகுந்தார்போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வர். தற்போது, கரைகள் முழுதும் முள்செடிகள் வளர்ந்து கிடப்பதால், பலவீனமான கரைப்பகுதிகளை கண்டறிந்து, கரை உடைப்பு ஏற்படுவதை தடுப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
நீர்வளத்துறையினர் ஆரணி ஆற்று கரைப்பகுதிகளை சூழ்ந்துள்ள முள்புதர்களை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.