/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நீர்வரத்து கால்வாயில் மரங்கள் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல் பூண்டி ஏரிக்கு நீர் செல்வது தடைபடும் அபாயம்
/
நீர்வரத்து கால்வாயில் மரங்கள் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல் பூண்டி ஏரிக்கு நீர் செல்வது தடைபடும் அபாயம்
நீர்வரத்து கால்வாயில் மரங்கள் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல் பூண்டி ஏரிக்கு நீர் செல்வது தடைபடும் அபாயம்
நீர்வரத்து கால்வாயில் மரங்கள் தண்ணீர் சேகரிப்பதில் சிக்கல் பூண்டி ஏரிக்கு நீர் செல்வது தடைபடும் அபாயம்
ADDED : ஜூலை 07, 2025 02:30 AM

திருவாலங்காடு:கொசஸ்தலையாற்றில் கருவேல மரங்கள் காடு போல வளர்ந்து, ஆற்றின் வழித்தடத்தை ஆக்கிரமித்து உள்ளதால், பூண்டி ஏரிக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் உருவாகும் கொசஸ்தலையாறு, திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, பூண்டி வழியாக சென்னை வரை செல்கிறது. இதன் நீளம், 134 கி.மீ., சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக கொசஸ்தலையாறு உள்ளது. இதற்கு காரணம், பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் கணிசமான தண்ணீரை வழங்கி வருகிறது.
அதேபோல் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு உட்பட ஏழு ஒன்றியங்களில், 40,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாகவும், மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
இந்நிலையில், திருவாலங்காடு அடுத்த ஆற்காடு குப்பம், இலுப்பூர், முத்துக்கொண்டாபுரம், ராமஞ்சேரி, நாராயணபுரம் வரை, 8 - 10 கி.மீ., துாரம் வரை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து, ஆங்காங்கே காடு போல் காட்சியளிக்கிறது.
இதனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தண்ணீர் செல்ல வழியின்றி நீரோட்டம் தடைபடும். இதன் காரணமாக, கரைகள் உடைப்பு ஏற்பட்டு, அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களுக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
லட்சுமாபுரம் பகுதியில் காடுபோல் கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால், அதில் காட்டு பன்றிகள் முகாமிட்டுள்ளதாகவும், அவை அருகே உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்துவதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே, கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வெள்ள நீர் கிராமத்திற்குள் புகுந்தது
ஆற்காடு குப்பம், லட்சுமாபுரம், இலுப்பூர் பகுதிகளில் உள்ள ஆற்றில் மணல் அள்ளப்பட்டதால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கருவேல மரங்கள் வளர துவங்கின. 10 ஆண்டுகளாக மழைக்காலத்தில் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டாலும், வரத்து கால்வாய்களில் தண்ணீர் செல்வதில்லை. 2021ம் ஆண்டு ஆற்று வழித்தடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களால் தண்ணீர் செல்ல வழியின்றி, கரையை அரித்து கிராமத்திற்குள் புகுந்தது.
- கவுசல்யா,
பா.ஜ., முன்னாள் கவுன்சிலர்,
ஆற்காடுகுப்பம்.

