/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணியில் சுணக்கம்
/
திருவள்ளூர் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணியில் சுணக்கம்
திருவள்ளூர் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணியில் சுணக்கம்
திருவள்ளூர் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணியில் சுணக்கம்
ADDED : பிப் 06, 2025 01:34 AM

திருவள்ளூர்: 'அம்ருத் பார்த்' திட்டத்தில், 28 கோடி ரூபாயில் திருவள்ளூர் ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. ஆறு நடைமேடை கொண்ட அந்த ரயில் நிலையத்தில் இருந்து, தினமும், ஒன்றரை லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.
மத்திய அரசின் 'அம்ருத் பாரத்' திட்டத்தின்கீழ், திருவள்ளூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தி, பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க, 28.04 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, ரயில் நிலையம் புதுப்பிக்கும் பணி, கடந்த ஆண்டு செப்., மாதம் துவங்கியது. ரயில் நிலையம் அருகில் உள்ள, பழைய கட்டடங்கள், இருசக்கர வாகன நிறுத்தம் இடம் ஆகியவற்றை இடித்தும் அகற்றப்பட்டது.
தற்போது உள்ள நுழைவாயில் மற்றும் அருகில் உள்ள பழைய கட்டடம் அகற்றப்பட்டு, பயணியர் உள்ளே செல்லவும், வெளியேறவும் இரண்டு நுழைவாயில் அமைக்கப்பட உள்ளது. நுழைவு வாயில் அருகில், விசாலமான டிக்கெட் கவுன்டர் அமைக்கப்பட உள்ளது.
'எஸ்கலேட்டர்' வசதியுடன் ஆறு நடைமேடைகளை இணைக்கும் வகையில், இரண்டு வழி மேம்பாலம், நான்கு 'லிப்ட்'கள், அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 2,500 ச.மீட்டர் பரப்பளவு கொண்ட, இரண்டு மற்றும் நான்குசக்கர வாகன நிறுத்துமிடம், ஆட்டோக்களுக்கு பிரத்யேக நிறுத்துமிடம் அமைய உள்ளது.
மேலும், நடைமேடைகளில் கூரை, ரயில் வருகை, புறப்பாடு குறித்த தகவலை பெற அதிநவீன தகவல் பலகை, மின்விளக்குகள் மற்றும் கழிப்பறை அமைக்கப்பட உள்ளது.
இப்பணி அனைத்தும், கடந்த, டிச.31க்குள் நிறைவடையும் வகையில் பணிகள் துவங்கியது. ஆனால், தற்போது பணிகள் அனைத்தும் மந்தகதியில் நடந்து வருகிறது.
'லிப்ட்' மேம்பாலம் மற்றும் நுழைவாயில் பணி, 3 மாதமாக முன்னேற்றம் எதுவுமின்றி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால், ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, மேம்பாட்டு பணியினை, துரித வேகத்தில் நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, ரயில் பயணியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.