/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கோவிலில் வாகனம் இறங்க ரூ.32 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்
/
திருத்தணி கோவிலில் வாகனம் இறங்க ரூ.32 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்
திருத்தணி கோவிலில் வாகனம் இறங்க ரூ.32 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்
திருத்தணி கோவிலில் வாகனம் இறங்க ரூ.32 கோடியில் திட்ட மதிப்பீடு தயார்
ADDED : ஆக 28, 2025 01:28 AM
திருத்தணி:திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து வாகனங்கள் இறங்குவதற்கு, 2019ம் ஆண்டில் அமைத்த மண்சாலை, ஆறு ஆண்டுகளுக்கு பின், தார்ச்சாலையாக மாற்ற திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், 32.50 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசு அனுமதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், வாகனங்கள் சென்று வருவதற்கு ஒரேயொரு மலைப்பாதை உள்ளதால், முக்கிய விழாக்கள், வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால், மலைப்பாதையில் ஒன்றரை கி.மீ., செல்ல, இரண்டு மணி நேரத்திற்கு மேல் வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதை தடுக்கும் வகையில், 2019ம் ஆண்டு, அப்போதைய கோவில் தக்கார் ஜெயசங்கர், சொந்த செலவில் மலைக்கோவிலில் இருந்து கீழே இறங்க மண் சாலை அமைத்தார்.
அதன்பின், கோவில் நிர்வாகம் தார்ச்சாலை அமைக்க, திருத்தணி நெடுஞ்சாலை துறையினரிடம் திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுக்குமாறு பரிந்துரை செய்தது. திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுத்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்தாண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் முயற்சியால், மண்சாலையை சீரமைத்து, தார்ச்சாலையாக மாற்றுவதற்கு திருத்தணி நெடுஞ்சாலை துறை யி னரிடம் ஒப்படைத்தது.
நெடுஞ்சாலை துறையினர் மண்சாலை இடத்தை பார்வையிட்டு, புதிதாக தார்ச்சாலை அமைக்க, 32.50 கோடி ரூபாய் தேவை என, திட்ட மதிப்பீடு தயார் செய்து, கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியது.
கடந்த மாதம் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின், 'கோவில் நிர்வாகம் சாலை அமைக்க தேவையான நிதியை, எங்கள் துறை கணக்கில் வரவு வைத்தால், சாலை பணிகள் விரைந்து முடித்து தரப்படும்' என்றனர்.
திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி கூறியதாவது:
முருகன் மலைக்கோவிலில் கீழே இறங்குவதற்கு, ஏற்கனவே அமைக்கப்பட்ட மண் சாலையை, தார்ச்சாலையாக மாற்றி தருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின்படி, திட்ட மதிப்பீடு தயாரித்து, 32.50 கோடி ரூபாய் செலவாகும் என, கோவில் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினோம்.
கோவில் நிர்வாகம் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிர்வாக அனுமதி வழங்க வேண்டும் என, பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் சாலை அமைக்க, அரசு அனுமதி வழங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அனுமதி கிடைத்ததும், திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறத்தில் இருந்து, 1.2 கி.மீ., நீளம், 15 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்கப்படும்.
இதில், பக்தர்கள் நடந்து செல்வதற்கு தனிப்பாதை மற்றும் வாகனங்கள் செல்ல தனிப்பாதை அமைக்கப்படும். ஆறு மாதத்திற்குள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு விடப்படும்.
இந்த மலைப்பாதையில் இரு இடங்களில் மழைநீர் வெளியேறுவதற்கு சிறு பாலங்கள் அமைக்கப்படும். இந்த பாதையால் வாகன ஓட்டிகள் நெரிசலின்றி எளிதாக செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாகன ஓட்டிகளுக்கு விமோசனம் முருகன் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் செல்வதற்கு ஒரு வழிப்பாதை தான் உள்ளது. ஒரே மலைப்பாதையில் வாகனங்கள் சென்று வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், மலைப்பாதை மட்டுமில்லாமல் திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பல மணி நேரம் வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர் . வாகனங்கள் இறங்குவதற்கு தனிப்பாதை அமைத்தால், 40 ஆண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும். - ஆர்.பாலாஜி, ஆட்டோ ஓட்டுனர், திருத்தணி.