/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் டேங்கர் லாரிகளை சாலையில் நிறுத்தி ஆர்ப்பாட்டம்
/
கழிவுநீர் டேங்கர் லாரிகளை சாலையில் நிறுத்தி ஆர்ப்பாட்டம்
கழிவுநீர் டேங்கர் லாரிகளை சாலையில் நிறுத்தி ஆர்ப்பாட்டம்
கழிவுநீர் டேங்கர் லாரிகளை சாலையில் நிறுத்தி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 17, 2024 12:46 AM

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பகுதியில், 20க்கும் மேற்பட்ட தனியார் கழிவுநீர் டேங்கர் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இவர்கள் சேகரிக்கும் கழிவுநீரை, திருமழிசையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், எரிபொருள், சுங்க கட்டணம் மற்றும் வாகன தேய்மானத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்க முடியாத என்பதால், கும்மிடிப்பூண்டி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, மூன்று ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது, பொது இடங்களில் கழிவுநீர் திறந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். குறிப்பாக, கும்மிடிப்பூண்டி சிப்காட் -- பெத்திக்குப்பம் இடையே உள்ள இணைப்பு சாலையோரம், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறந்து விடுகின்றனர்.
இதனால், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி மாசு அடைந்து கழிவுநீர் ஏரியாக மாறியுள்ளது. அதை தடுக்கும் விதமாக, நீர்வளத் துறையினர் அளித்த புகாரின்படி, கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், இரு தினங்களுக்கு முன், மழைநீர் கால்வாயில் கழிவுநீர் திறந்து விட்ட, தனியார் டேங்கர் லாரி ஒன்றை பறிமுதல் செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று, கும்மிடிப்பூண்டி பகுதி கழிவுநீர் டேங்கர் லாரிகளை, வேர்க்காடு பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் நிறுத்தி, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் செய்தனர்.
உடனடியாக, கும்மிடிப்பூண்டியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதன் உரிமையாளர்கள் 20 பேர், லாரிகள் அருகே நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவர்கள் கோரிக்கை மீதான மனு ஒன்றை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட துணை தாசில்தார் காயத்ரி, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர்.