/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியல்
/
காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு மறியல்
ADDED : ஏப் 20, 2025 01:08 AM

திருத்தணி, திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஊராட்சி நிர்வாகம் இரண்டு குடிநீர் மேல்நிலை தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, பெரியகடம்பூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால், குடிநீருக்காக பெண்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கு காரணம், குடிநீர் ஏற்றும் மின்மோட்டார் பழுதாகி இருந்தது.
மேலும், பெண்கள் சீரான குடிநீர் வழங்க கோரி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை இல்லை. இதனால் மனமுடைந்த கிராம பெண்கள், காலி குடங்களுடன் பெரியகடம்பூர் பேருந்து நிறுத்தம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் மற்றும் ஒன்றிய அதிகாரிகள், 'குடிநீர் பிரச்னை உடனடியாக சரிசெய்யப்படும்' என்றனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

