/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலை சேதமானதை கண்டித்து அரியன்வாயலில் போராட்டம்
/
சாலை சேதமானதை கண்டித்து அரியன்வாயலில் போராட்டம்
ADDED : செப் 05, 2025 02:15 AM

மீஞ்சூர்:புதிய சாலை திட்டத்திற்கு கட்டுமான பொருட்களை கொண்டு செல்லும் கனர வாகனங்களால் சாலைகள் சேதம் அடைந்து, புழுதி பறப்பதால் அவதியுறும் குடியிருப்பு மக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் இடையே, 132 கி.மீ., தொலைவிற்கு, சென்னை எல்லை சாலைத்திட்டத்திற்கான பணிகள் நடைபெறுகிறது.
முதல் நிலையாக, காட்டுப்பள்ளி - தச்சூர் இடையே, வாயலுார், கல்பாக்கம், வன்னிப்பாக்கம் ஆகிய கிராமங்கள் வழியாக 25 கி.மீ, தொலைவிற்கு சாலைப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பணிகளுக்காக செம்மண், கிராவல், சவுடு மண், சாம்பல் கழிவுகள் உள்ளிட்டவை, மீஞ்சூர் - காட்டூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள அரியன்வாயல் பகுதி வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
நாள்முழுதும், நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் அரியன்வாயல் பகுதி வழியாக செல்வதால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
நேற்று, கனரக வாகனங்களுக்கு தடைவிதிக்கக்கோரி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீஞ்சூர் போலீசார் மற்றும் சாலைத்திட்டப்பணிகளை மேற்கொள்ளும் தனியார் கட்டுமான நிறுவனத்தின் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
குடியிருப்பு பகுதியில் சேதம் அடைந்த சாலையை புதுப்பித்து தருவது, புழுதிபறக்காமல் இருக்க தினமும் சாலையில் தண்ணீர் தெளிப்பது, இரவு நேரங்களில் மட்டும் கனரக வாகனங்களை இயக்குவது என, உறுதியளிக்கப்பட்டது.
அதையடுத்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால், மீஞ்சூர் - காட்டூர் சாலையில், ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.