/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
/
விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : அக் 19, 2025 01:51 AM

திருத்தணி: தளபதி கல்விக் குழுமம் சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை தாளாளர் பாலாஜி வழங்கினார்.
திருத்தணியில் இயங்கி வரும் தளபதி கல்விக் குழுமம் சார்பில், இளைஞர்கள் இடையே விளையாட்டு போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில், கிரிக்கெட், கைப்பந்து, இறகுபந்து போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம், மாவட்ட அளவில் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர்களுக்கு கல்விக்குழு தாளாளர் பாலாஜி, பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கினார்.
இதையடுத்து திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.
இதில் பங்கேற்ற அணிகளுக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான கைப்பந்து மற்றும் வலை போன்ற உபகரணங்கள் வழங்கும் விழா தளபதி கே.விநாயகம் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.
இதில் தளபதி கல்விக் குழுமத் தாளாளர் பாலாஜி பங்கேற்று விளையாட்டு வீரர்களுக்கு கைப்பந்து, வலை மற்றும் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கைப்பந்து பயிற்சியாளர் ஹேமநாதன், கல்விக் குழும நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.