/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புதுவாயல் - சின்னகாவணம் புறவழிச்சாலை பணி...மந்தம்!:நிதி ஒதுக்கீடு தாமதத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு
/
புதுவாயல் - சின்னகாவணம் புறவழிச்சாலை பணி...மந்தம்!:நிதி ஒதுக்கீடு தாமதத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு
புதுவாயல் - சின்னகாவணம் புறவழிச்சாலை பணி...மந்தம்!:நிதி ஒதுக்கீடு தாமதத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு
புதுவாயல் - சின்னகாவணம் புறவழிச்சாலை பணி...மந்தம்!:நிதி ஒதுக்கீடு தாமதத்தால் வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : பிப் 16, 2024 09:28 PM

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி பகுதியில் எண்ணுார் காமராஜர் துறைமுகம், கப்பல் கட்டும் தளம், அதானி துறைமுகம் ஆகியவை அமைந்து உள்ளது.
துறைமுகங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் சென்று வரும் வாகனங்களின் போக்குவரத்து வசதிக்காக, பல்வேறு சாலை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தற்போது பொன்னேரி அடுத்த புதுவாயல் - சின்னகாவணம் இடையே உள்ள நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்து, ஏலியம்பேடு, குண்ணம்மஞ்சேரி கிராமங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணி 2022, ஜூன் மாதம் துவங்கப்பட்டது.
இருவழி சாலை
சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பொன்னேரி,- பழவேற்காடு நெடுஞ்சாலையுடன் இணையும் வகையில், 4.2 கிமீ., தொலைவிற்கு தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 45 கோடி ரூபாயில் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. இதற்காக, 31,400 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மீடியனுடன், 100அடி அகலத்தில் இருவழிச் சாலையாக அமைகிறது.
மழைநீர் செல்வதற்காக, ஒன்பது இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கப்பட்டு. இரண்டு அடுக்கு மண், அதன் மீது சரளைக் கற்கள் கொட்டி சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், கடந்த, நான்கு மாதங்களாக, அடுத்தகட்ட பணி ஏதும் நடைபெறாமல் உள்ளது. ஒரு சில இடங்களில், மண் கொட்டி சமன்படுத்தும் பணிகள் இல்லாமல், விளைநிலங்களாக உள்ளன.
மேற்கண்ட திட்டப்பணிகள் மந்த கதியில் நடைபெறும் நிலையில், கொட்டப்பட்ட சரளைக் கற்களில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள்
சரளைக் கற்கள் மீது கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறப்பதால் கிராமவாசிகளும், இருசக்கர வாகனங்களில் செல்வோரும் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
மேற்கண்ட சாலைப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவித்ததாவது:
நிதி ஒதுக்கீடு இல்லை எனக்கூறி கடந்த, நான்கு மாதங்களாக எந்தவொரு பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளனர். மேலும், சாலை அமையும் இடங்களில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள் சிலருக்கு இழப்பீடு வழங்கும் பணிகளும் நடைபெறவில்லை.
இதில் வருவாய்த் துறையின் நில எடுப்புப் பிரிவினர் அக்கறை காட்டாமல் உள்ளனர். சாலை முழுதும் சரளைக் கற்கள் சிதறிக் கிடப்பதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இரவு நேரங்களில் சரளைக் கற்களில் சிக்கி சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து திட்டப்பணிகளில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
இத்திட்டம் ஜப்பான் - இந்தியா கூட்டு திட்டத்தில் மேற்கொள்ளப்படுதால், நிதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு உள்ளது. பணிகள் உடனடியாக துவங்கப்படும். சாலை அமையும் இடங்களில் உள்ள சிலரின் தனியார் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய்த் துறையிடம் தெரிவித்து உள்ளோம்.
அதில் உள்ள சட்ட சிக்கல்களை சரிசெய்து தரும்படியும் தெரிவித்து வருகிறோம். அப்பணி முடிந்தவுடன், விடுபட்ட இடங்களிலும் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சின்னகாவணம் பகுதியில் நில எடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். கூடிய விரைவில், புதுவாயல் - சின்னகாவணம் இடையேயான சாலைப்பணிகள் முழுமை பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.