/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் ரயில்வே மேம்பால பணி... மந்தம்! திட்டமிட்ட காலத்திற்குள் முடியுமா?
/
மீஞ்சூரில் ரயில்வே மேம்பால பணி... மந்தம்! திட்டமிட்ட காலத்திற்குள் முடியுமா?
மீஞ்சூரில் ரயில்வே மேம்பால பணி... மந்தம்! திட்டமிட்ட காலத்திற்குள் முடியுமா?
மீஞ்சூரில் ரயில்வே மேம்பால பணி... மந்தம்! திட்டமிட்ட காலத்திற்குள் முடியுமா?
ADDED : நவ 05, 2024 07:09 AM

மீஞ்சூர்: மீஞ்சூரில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால் திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் - காட்டூர் மாநில நெடுஞ்சாலையில், மீஞ்சூர் -- நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி. 16., ரயில்வே கேட் அமைந்து உள்ளது.
அரியன்வாயல், நெய்தவாயல், திருவெள்ளவாயல், காட்டூர் உள்ளிட்ட, 70 கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த ரயில்வே கேட்டை கடந்து செல்கின்றனர்.
நிதி ஒதுக்கீடு
சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில், புறநகர், சரக்கு, விரைவு என, தினமும், 150க்கும் அதிகமான ரயில்கள் பயணிப்பதால், ரயில்வே கேட் மூடி மூடி திறக்கப்படுகிறது.
ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதை தவிர்க்க, கடந்த, 2016ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், மேற்கண்ட ரயில்வே கேட்டின் அருகே மேம்பாலம் அமைப்பதற்காக கட்டுமானம் மற்றும் நில எடுப்பு பணிகளுக்கு என, 67.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
30 சதவீதம்
ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாலத்திற்கான பணிகள், கடந்த, 2021ல் முடிந்தது. பாலத்தின் இருபுறமும் உள்ள காட்டூர் சாலை மற்றும் அரியன்வாயல் பகுதிகளில் இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் இழுபறி நீடித்தது.
இருபுறமும் சாலை அமையும் இடத்தில் இருந்த, 72 பேரிடம் இருந்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் மந்த கதியில் நடந்தன. வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட தொடர் போராட்டம் மற்றும் முயற்சியின் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இழப்பீடு வழங்கி நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
அதை தொடர்ந்து, கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் பாலத்தின் இருபுறமும் இணைப்பு சாலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.
கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் இருந்த வீடு, கடைகளை இடிப்பது, மழைநீர் கால்வாய் அமைப்பது, பில்லர் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த ஆண்டு, ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது.
ஆனால் பணிகள் துவங்கி ஓராண்டு ஆகும் நிலையில், இதுவரை, 30 சதவீதத்திற்கும் குறைவான அளவில் கட்டுமானம் நடைபெற்று உள்ளது.
பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது கிராமவாசிகள், வாகன ஓட்டிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
பதற்றம்
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
அதிகமான ரயில்கள் இவ்வழியாக செல்வதால், பெரும்பாலான நேரம் ரயில்வே கேட் மூடியே இருக்கிறது. திறக்கும் சில விநாடிகளில் வாகன ஓட்டிகள் அவசர அவசரமாகவும், பதற்றத்துடனும் கடக்க வேண்டி உள்ளது. அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நீண்டநேரம் காத்திருக்கின்றன.
இந்த திட்டத்தில் மழைநீர் கால்வாய் பணிகள் முழுமை பெறவில்லை. இருபுறமும், 13 பில்லர் அமையும் நிலையில், இதுவரை, 3 பில்லர்களே முழுமை பெற்று உள்ளன.
பணிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் நகர்த்தி அமைக்கப்படவிலலை. குறைந்த பணியாளர்களை கொண்டு பணி மேற்கொள்ளப்படுகிறது.திட்டமிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டுமானால், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து துரிதபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.