/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்...கிடப்பில்!:கட்டுமானங்கள் தயாரித்தும் பயனின்றி வீண்
/
மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்...கிடப்பில்!:கட்டுமானங்கள் தயாரித்தும் பயனின்றி வீண்
மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்...கிடப்பில்!:கட்டுமானங்கள் தயாரித்தும் பயனின்றி வீண்
மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்...கிடப்பில்!:கட்டுமானங்கள் தயாரித்தும் பயனின்றி வீண்
ADDED : செப் 28, 2024 01:32 AM

மீஞ்சூர்: மீஞ்சூரில் ரயில்வே தண்டவாளங்களை கிராமவாசிகள் ஆபத்தான முறையில் கடப்பதை தவிர்க்க திட்டமிடப்பட்ட சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டதுடன், அதற்காக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்களும் பயனின்றி வீணாகி வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் காட்டூர், நெய்தவாயல், வாயலுார், திருவெள்ளவாயல், புதுகுப்பம் உள்ளிட்ட 30க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன.
ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், மீஞ்சூர் பஜார் பகுதி அமைந்துள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்தோர் அத்தியாவசிய தேவைகளுக்காக, மீஞ்சூர் பஜார் பகுதிக்கு செல்ல பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் வந்து, அரியன்வாயல் பகுதியில் இறங்கி, அங்குள்ள ரயில் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.
தொடர்ந்து ரயில் போக்குவரத்து இருக்கும் நிலையில், கிராமவாசிகள் ஆபத்தான முறையிலேயே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
அதேபோல், இருசக்கர வாகனங்களில் வருவோர், மீஞ்சூர் ரயில்வே கேட் வழியை பயன்படுத்துகின்றனர். ரயில்வே கேட் மூடியிருக்கும் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.
இக்கிராமவாசிகளின் தொடர் கோரிக்கையின் பயனாக, அரியன்வாயல் - மீஞ்சூர் பஜார் பகுதி இடையே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள், 2019ல் துவங்கியது.
ரயில் தண்டவாளங்களுக்கு கீழ்பகுதியில் பொருத்துவதற்கான கான்கிரீட் கட்டுமானங்கள், 2020ல் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இதனால், சுரங்கப்பாதை அமைந்துவிடும் என, காத்திருந்த கிராமவாசிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கட்டுமானங்கள் தயாரித்த பின், சுரங்கப்பாதை அமைப்பதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை.
நான்கு ஆண்டுகளாக சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதற்காக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் கட்டுமானங்கள் பயனின்றி வீணாகி வருகின்றன.
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத்திற்கு கிராமவாசிகள், வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து, நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது.
சுரங்கப்பாதை இல்லாததால், கிராமவாசிகள் ரயில்வே தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து செல்வதும் தொடர்கிறது. நீண்டநேரம் காத்திருக்கும் சரக்கு ரயில்களின் அடிப்பகுதியில் புகுந்து செல்வதால், அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயமும் உள்ளது.
இந்த ரயில் நிலையத்தின் அருகே, கிடப்பில் போடப்பட்ட சுரங்கப்பாதை பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வாகனங்கள் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதால், மீஞ்சூர் - காட்டூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட செல்ல முடியாத சூழல் உள்ளது.
காலை நேரங்களில் மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
மீஞ்சூர் பஜார் - அரியன்வாயலுக்கு இடையே சுரங்கப்பாதை இருந்தால், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் அதன் வழியாக எளிதில் சென்றுவிடும். இதனால், போக்குரவத்து நெரிசலையும் தவிர்க்கலாம்.
மேலும், ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளங்களை கடப்பதும் தவிர்க்கப்படும். ஆய்விற்கு வரும் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. அடுத்தகட்டமாக போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.