sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்... வரும்... ஆனா வராது!:6 ஆண்டுகளாக 80 கிராமத்தினர் காத்திருந்து அவதி

/

மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்... வரும்... ஆனா வராது!:6 ஆண்டுகளாக 80 கிராமத்தினர் காத்திருந்து அவதி

மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்... வரும்... ஆனா வராது!:6 ஆண்டுகளாக 80 கிராமத்தினர் காத்திருந்து அவதி

மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம்... வரும்... ஆனா வராது!:6 ஆண்டுகளாக 80 கிராமத்தினர் காத்திருந்து அவதி


UPDATED : ஆக 03, 2025 12:23 AM

ADDED : ஆக 03, 2025 12:17 AM

Google News

UPDATED : ஆக 03, 2025 12:23 AM ADDED : ஆக 03, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூரில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டு, ஆறு ஆண்டுகளாகியும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், 80க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், நடிகர் வடிவேல் காமெடியான 'வரும்... ஆனா வராது' என்பது போல, கானல் நீரான திட்டத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

Image 1451206


திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தின் கிழக்கு பகுதியில் அரியன்வாயல், காட்டூர், நெய்தவாயல், வாயலுார், திருவெள்ளவாயல், புதுகுப்பம் உள்ளிட்ட, 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில், மீஞ்சூர் நகரப்பகுதி அமைந்துள்ளது. மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்தோர் கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, மீஞ்சூர் நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர்.

இவர்கள் பேருந்து, ஷேர் ஆட்டோக்களில் பயணித்து, மீஞ்சூர் ரயில் நிலையம் அருகில் இருக்கும் அரியன்வாயல் பகுதியில் இறங்கி, அங்குள்ள ரயில் தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து, மீஞ்சூர் நகரப்பகுதிக்கு செல்கின்றனர்.

இந்த ரயில் வழித்தடத்தில், புறநகர், விரைவு, சரக்கு ரயில் என, தினமும் 300க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, இருசக்கர வாகனங்களில் வருவோர், மீஞ்சூர் ரயில்வே கேட் வழியாக, தண்டவாளங்களை கடந்து செல்வர்.

ரயில்வே கேட் மூடியிருக்கும் வேளைகளில், இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் விதிமீறி தண்டவாளங்களை ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர்.

மேற்கண்ட கிராம மக்களின் பாதுகாப்பான பயணத்திற்காக, அரியன்வாயல் - மீஞ்சூர் நகர் பகுதி இடையே, ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க 2019ல் திட்டமிடப்பட்டது; அதற்கான முதற்கட்ட பணிகள் நடந்தன.

ஆனால், ஆறு ஆண்டுகள் கடந்தும், துவக்க நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், ரயில்வே கேட் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயணிப்பதை தடுக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

தற்போது, மற்ற வாகனங்களுடன், இருசக்கர வாகனங்களும் ரயில்வே கேட்டில் காத்திருக்கின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுகுறித்து, வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்திலிடம் முறையிட்டதை தொடர்ந்து, கடந்த ஜனவரி 29ம் தேதி, ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.



ஆய்விற்கு பின், 'விரைவில் சுரங்கப்பாதை அமைக்கப்படும்' என தெரிவித்திருந்தார். ஆனால், ஆறு மாதங்களான நிலையில், சுரங்கப்பாதை திட்டத்திற்கான எந்த பணிகளும் அங்கு நடைபெறவில்லை.

இதனால், கிராம மக்களின் ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடப்பதும், இருசக்கர வாகன ஓட்டிகளின் இன்னல்களும் தொடர்கின்றன.

போக்குவரத்து நெரிசல் இருசக்கர வாகனங்கள் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதால், மீஞ்சூர் - காட்டூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மீஞ்சூர் நகரம் - அரியன்வாயல் பகுதி இடையே சுரங்கப்பாதை இருந்தால், இருசக்கரம் மற்றும் இலகுரக வாகனங்கள் அதன் வழியாக எளிதாக சென்றுவிடும். இதனால், காட்டூர் சாலையில் நெரிசல் ஏற்படுவதையும், கிராம மக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடப்பதையும் தவிர்க்கலாம். அதிகாரிகள் பலமுறை ஆய்வு செய்தும் நடவடிக்கை இல்லை. புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே கோட்ட மேலாளரிடம் முறையிட உள்ளோம் - எம்.அபுபக்கர், சமூக ஆர்வலர், மீஞ்சூர்.


தண்டவாளங்களை பெயர்த்து, கான்கிரீட் கட்டுமானங்களை பொருத்தி சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி தான் பணிகளை மேற்கொள்ள முடியும். தற்போது, அதே பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகள் முடிந்தால் தான், சுரங்கப்பாதை அமைப்பதற்கு திட்டமிடப்படும். விரைவில் அதற்கான தீர்வு கிடைக்கும். - ரயில்வே அதிகாரி, திருவள்ளூர்.


கடம்பத்துார் சுரங்கப்பாதை மூன்றாண்டுகளாக கிடப்பில் சென்னை - அரக்கோணம் ரயில்வே மார்க்கத்தில் கடம்பத்துார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, 2022 டிசம்பரில், 5.50 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. ஆறு மாதத்தில் பணிகள் முடிக்க திட்டமிட்ட நிலையில், மூன்று ஆண்டுகளாகியும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்காக தயாரிக்கப்பட்ட கான்கிரீட் தடுப்புகள் வீணாகி வருகின்றன. சுரங்கப்பாதை மற்றும் நடைமேம்பாலம் இல்லாததால், 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து வருகின்றனர்.



மீஞ்சூர் பேரூராட்சியை கண்டித்து வரும் 6ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு மழைநீர் வடிகால்வாய் இல்லாததால், மழைக்காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுகிறது. மீஞ்சூர்- - காட்டூர் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலப் பணிகள் தாமதமாக நடப்பதால், மாணவ - மாணவியர், பணிக்கு செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்டோர் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணமான மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தையும், தி.மு.க., அரசையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 6ம் தேதி காலை 10:00 மணிக்கு, மீஞ்சூர் பேரூராட்சி பஜாரில் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us