/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்: மக்கள் தவிப்பு
/
திருத்தணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்: மக்கள் தவிப்பு
திருத்தணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்: மக்கள் தவிப்பு
திருத்தணி குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீர்: மக்கள் தவிப்பு
ADDED : அக் 25, 2025 11:17 PM

திருத்தணி: திருத்தணி முருகப்ப நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதியில்லாததால், குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் இரு நாட்களாக மின்மோட்டார் மூலம் வெளியேற்றியும் தண்ணீர் வடியாததால், அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருத்தணி நகராட்சி, ஐந்தாவது வார்டு முருகப்ப நகர் பகுதியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி, விநாயகர் கோவிலும் உள்ளன. முருகப்ப நகர் முதல் தெரு மற்றும் குறுக்கு தெருவில், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை.
இதனால், பலத்த மழை பெய்யும் போது, குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கிவிடுகிறது. ஐந்து நாட்களாக பெய்து வரும் கனமழையால், முருகப்ப நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியே வரும் மக்கள் தண்ணீரில் இறங்கிவர வேண்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகம், நேற்று முன்தினம் முதல் நேற்று மாலை வரை மின்மோட்டார் மூலம் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் குறையாததால் கடும் சிரமப்படுகின்றனர்.
மழைநீர் தேங்கியுள்ள பகுதியில் தான் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் முதல் அவ்வப்போது பலத்த மழையும், லோசான துாறல் மழையும் பெய்து வருகிறது.
இதனால், முருகப்ப நகரில் மழைநீர் அகற்றுவதில் மேலும் தாமதமாகிறது.நாளை முதல் 'மோந்தா' புயலால் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், முருகப்பநகர் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
எனவே, கலெக்டர் பிரதாப் முருகப்பநகரில் ஆய்வு செய்து, வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றி, நிரந்தர தீர்வான மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

