தேவனேரி இணைப்பு சாலையில் மழைநீர் தேக்கம்: தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்
தேவனேரி இணைப்பு சாலையில் மழைநீர் தேக்கம்: தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்
UPDATED : அக் 25, 2026 04:05 PM
ADDED : அக் 25, 2026 04:02 PM

சோழவரம்: தேவனேரி இணைப்பு சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் தத்தளித்து வருகின்றனர்.
சென்னை – கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அடுத்த தேவனேரி பகுதியில் உள்ள இணைப்பு சாலையில், இரண்டு அடி உயரத்திற்கு மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
மேற்கண்ட பகுதியில், தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கான சுரங்கப்பாதையும் உள்ளது. அந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
தினசரி அந்த சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள், மேற்கண்ட இணைப்பு சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதை அறிந்து, 3 – 4 கி.மீ., சுற்றிக் கொண்டு மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர்.
ஆனால், புதிதாக அந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், குளம்போல் தேங்கிய மழைநீரில் சிக்கி தத்தளித்து வருகின்றனர்.
ஆழமான பகுதிகளை கடக்கும்போது, வாகனங்கள் பழுதாகி நிற்கின்றன. இதனால், வாகன ஒட்டிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
மேற்கண்ட இணைப்பு சாலைகளில் தண்ணீர் இருப்பது குறித்து, வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், அங்கு எந்தவொரு அறிவிப்பும், தடுப்புகளும் வைக்கப்படவில்லை.
பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய சோழவரம் போலீசார், செங்குன்றம் போக்குவரத்து போலீசார் அலட்சியமாக உள்ளனர்.
இணைப்பு சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் அக்கறை காட்டவில்லை என, வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், விபத்து உள்ளிட்ட அசம்பாவிதங்களில் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், இணைப்பு சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
