/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோழவரத்தில் மழைநீர் சேமிக்கும் நீர்நிலைகள்...மாயம்!: ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்
/
சோழவரத்தில் மழைநீர் சேமிக்கும் நீர்நிலைகள்...மாயம்!: ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்
சோழவரத்தில் மழைநீர் சேமிக்கும் நீர்நிலைகள்...மாயம்!: ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்
சோழவரத்தில் மழைநீர் சேமிக்கும் நீர்நிலைகள்...மாயம்!: ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோகும் அதிகாரிகள்
ADDED : அக் 04, 2024 02:36 AM
சோழவரம்:சோழவரத்தில் மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஏழு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளால் மாயமாகி வருவது குறித்து புகார் தெரிவித்தும், ஆக்கிரமிப்புகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது சமூக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், பூதுார் கிராமத்தில் விவசாய நிலங்களுக்கு மத்தியில், 8.21 ஏக்கர் பரப்பில், ஏரி உள்வாய் மற்றும் குளங்கள் என, மொத்தம் ஏழு நீர்நிலைகள் இருந்தன.
இவை மழைநீரை சேமித்து, நிலத்தடி நீரை பாதுகாத்து வந்தன. காலப்போக்கில், தனிநபர்கள் சிலரால் இந்த நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவற்றில் நெல், வாழை பயிரிட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதனால், கிராமங்களில் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஏரி உள்வாய் பகுதியும் ஆக்கிரமிப்பில் உள்ளதால், பூதுார் ஏரிக்கு நீர்வரத்து இன்றி உள்ளது.
இக்கிராமத்தில் இருந்த நீர்நிலைகள் மாயமானதாகவும், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, 2018ல் இருந்து வட்டாட்சியர், சோழவரம் பி.டி.ஓ., கலெக்டர் என, கிராமவாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
தொடர் கோரிக்கையால், 2021ல், வருவாய்த் துறையினர், 'அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளை ஆக்கிரமித்து, பொதுமக்கள் அத்துமீறி விவசாயம் மற்றும் கட்டுமானங்களில் ஈடுபடக் கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை பலகை மட்டும் வைத்தனர்.
அடுத்து வந்த நாட்களில் வருவாய்த் துறை வைத்த எச்சரிக்கை பலகைகளையும், ஆக்கிரமிப்பாளர்கள் துாக்கி எறிந்து, தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர்.
நீர்நிலைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலேயே சிக்கி உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகங்கள் அலட்சியம் காட்டுவதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதாகவும், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பூதுார் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆ.சிவகுமார் கூறியதாவது:
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகள் சோழவரம் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. வருவாய்த் துறையினருடன் இணைந்து அவற்றை அகற்ற வேண்டும்.
இதுகுறித்து பலமுறை மனு அளித்து விட்டோம். கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த போது, ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது நீர்நிலைகளில் நடவு பணிகள் நடைபெறுகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகள், நீர்நிலைகளை மீட்பதில் ஏனோ அக்கறை காட்டாமல் இருக்கின்றனர்.
இனி அதிகாரிகளை நம்பி பயனில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளோம். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.