/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
4 முறை இடிந்த நெடியம் தரைப்பாலம் மீண்டும் சேதம்; பருவமழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
/
4 முறை இடிந்த நெடியம் தரைப்பாலம் மீண்டும் சேதம்; பருவமழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
4 முறை இடிந்த நெடியம் தரைப்பாலம் மீண்டும் சேதம்; பருவமழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
4 முறை இடிந்த நெடியம் தரைப்பாலம் மீண்டும் சேதம்; பருவமழைக்கு முன் சீரமைக்கப்படுமா?
ADDED : அக் 14, 2024 06:14 AM

பள்ளிப்பட்டு : நெடியம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் அடுத்தடுத்து நான்கு முறை இடிந்து விழுந்துள்ளது. தற்போதும் பாலம் சேதமடைந்துள்ள நிலையில், நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சித் துறையினர் ஒருங்கிணைந்து, வரும் பருவமழைக்கு முன் தரைப்பாலத்தை சீரமைப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, நெடியம், புண்ணியம், சாமந்தவாடா வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இதில், சொரக்காய்பேட்டை, நெடியம் இடையே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே, 200 மீட்டர் அகலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் வழியாக, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பகுதிவாசிகள், ஆந்திர மாநிலம், நகரிக்கு சென்று வருகின்றனர்.
பள்ளிப்பட்டு வழியாக நகரி செல்வதைக் காட்டிலும், நெடியம் தரைப்பாலம் வழியாக செல்வதால், நேரமும், பயண துாரமும் குறைகிறது. 10 கி.மீ., வரை பயண துாரம் குறைகிறது.
நெசவாளர்கள், தங்களின் நெசவுப் பொருட்களை இந்த வழியாக ஆந்திர மாநிலம், நகரிக்கு கொண்டு செல்ல இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகளில், நான்கு முறை இந்த பாலம் சேதம் அடைந்தது. 2021ல் பெய்த கனமழையின் போது, பாலத்தின் மையப்பகுதி அடியோடு இடிந்து விழுந்தது.
பாலம் கட்டுமானத்தில் இரும்புக் கம்பிகள் பயன்படுத்தாததும், உறுதியான அஸ்திவாரமும் அமைக்கப்படாதது காரணம் எனக் கூறப்படுகிறது.
இறுதியாக கடந்த 2021ல் இடிந்த பாலம் முறையாக சீரமைக்கப்படாததால், பாலம் தற்போது வரை அபாய நிலையிலேயே கிடக்கிறது. 200 மீட்டர் அகலமுள்ள இந்த தரைப்பாலத்தில், மையப்பகுதியில் 30 மீட்டர் அகலத்திற்கு, பாலத்திற்கு கீழே வெள்ளம் பாய்ந்து செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த பகுதியில், பாலத்திற்கு அடியில் வெள்ளம் பாய்ந்து செல்வதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பாலம் தொங்கும் நிலையில் கிடக்கிறது. இதனால், எந்த நேரத்திலும் மீண்டும் இடிந்து விழும் நிலை உள்ளது.
கடந்த 2021ல் பாலம் சேதம் அடைந்தபோது, இந்த வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பாலம் இடிந்து விழுந்த பகுதியில், மண் கொட்டி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கான்கிரீட் கொண்டும் சீரமைக்கப்பட்டது. ஆனாலும், பாலத்தின் மையப்பகுதி இதுவரை சீரமைக்கப்படாமல் தொங்கும் நிலையில் கிடக்கிறது.
வரும் பருவ மழைக்கு முன்னதாக நெடியம் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து பள்ளிப்பட்டு ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், நெடியம் தரைப்பாலம், ஊரக வளர்ச்சித் துறை வாயிலாக கட்டி முடிக்கப்பட்டது. தற்போது கொசஸ்தலை ஆறு பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
கொசஸ்தலை ஆற்றில், நெடியம் மற்றும் சொரக்காய்பேட்டை ஆற்றங்கரை வரையிலான தார் சாலை, நெடுஞ்சாலை துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் தான் இந்த பாலம் சீரமைப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிப்பட்டு மற்றும் ஆர்.கே.பேட்டை தாலுகாவில் வசிக்கும் நெசவாளர்கள், ஆந்திர மாநிலம், நகரி, சிந்தலபட்டடை, சத்திரவாடா உள்ளிட்ட பகுதியில் இருந்து நெசவு மூலப்பொருட்களை கொண்டு வருகின்றனர். இதற்காக, நெடியம் தரைப்பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தை விரைந்து சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
- என்.வி.கிருஷ்ணன்,
விசைத்தறி நெசவாளர், பொதட்டூர்பேட்டை.